பெரம்பலூருக்கு "சிக்கு புக்கு' ரயில் வருமா? லோக்சபா தேர்தலில் கோரிக்கையை முன் வைக்க மக்கள் திட்டம்

பெரம்பலூர்: பெரம்பலூருக்கு, ரயில் போக்குவரத்து வசதி வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை, வரும் லோக்சபா தேர்தலின்போது பெரம்பலூர் மாவட்ட மக்கள் முன் வைக்க முடிவு செய்துள்ளனர். பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என, ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டு, 1936ல் ஆத்தூர்-பெரம்பலூர் ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது. 

சுதந்திரத்துக்குப்பின் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
பெரம்பலூர் லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று, எம்.பி.,யாக சென்றவர்கள், பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைக்க மறந்தனர். 


இதைத்தொடர்ந்து, 1999 லோக்சபா தேர்தலின்போது, தி.மு.க., சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜாவும், ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த பாடுபடுவேன் வாக்குறுதி அளித்து, இத்தொகுதியில் வெற்றி பெற்றார்.

இதன்படி பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தக்கோரி பார்லிமெண்ட்டில் கோரினார். இதற்கு அப்போதைய ரயில்வே அமைச்சர், கும்பகோணம் முதல், நாமக்கல் வரை, பெரம்பலூர் வழியாக ரயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக, 600 கோடி ரூபாயில் சர்வே செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து பெரம்பலூருக்கு ரயில் வந்தது போல், ஃபோட்டோவுடன், டிஜிட்டல் பேனர், தி.மு.க., சார்பில் வைக்கப்பட்டது. ஆனால், பின்னர் இத்திட்டம் தேர்தல் வரும்பொழுதெல்லாம் வாக்குறுதி திட்டமாக மாறிப்போனது. கடந்த, 2009ல், பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடங்கிய பெரம்பலூர் லோக்சபா தொகுதியில், பெரம்பலூருக்கு ரயில் வசதி என்ற கோரிக்கையை மக்கள் முன் வைத்தனர்.


இதை வாக்குறுதியாக கொடுத்து வேட்பாளர்கள் ஓட்டுக்கேட்டனர். இதை நம்பிய வாக்காளர்களும், தி.மு.க.,வைச் சேர்ந்த நெப்போலியனை, எம்.பி.,யாக்கினர். ஆனால் நன்றி சொல்லவும், இரண்டு, மூன்று அரசு விழாவுக்கு மட்டும் வந்து சென்றவர், மற்றபடி தொகுதி பக்கமே நெப்போலியன் தலைக்காட்டவில்லை.


ரயில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பெரம்பலூருக்கு கொண்டுவருவேன் என, சிட்டிங் எம்.பி.,யான நெப்போலியன் கடந்த தேர்தலின்போது, கலர் கலராக ரீல் விட்டதில், இத்தொகுதியின் வாக்காளர்கள் ஏமாந்ததுதான் மிச்சம்.


கும்பகோணம்-நாமக்கல், சிதம்பரம்-நாமக்கல், ஆத்தூர்-பெரம்பலூர் என, பெரம்பலூர் வழியாக ரயில் போக்குவரத்து வசதி என, அறிவிக்கப்பட்டவை அப்படியே உள்ளன. ரயிலை நேரில் கூட பார்க்காத, பெரம்பலூர் மாவட்ட கிராம மக்கள், விரைவில் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து வசதி வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை, மீண்டும் முன் வைக்க முடிவு செய்துள்ளனர்.
பெரம்பலூருக்கு "சிக்கு புக்கு' ரயில் வருமா? லோக்சபா தேர்தலில் கோரிக்கையை முன் வைக்க மக்கள் திட்டம் பெரம்பலூருக்கு "சிக்கு புக்கு' ரயில் வருமா? லோக்சபா தேர்தலில் கோரிக்கையை முன் வைக்க மக்கள் திட்டம் Reviewed by நமதூர் செய்திகள் on 23:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.