வேண்டுமானால் கேமராவுடன் வாருங்கள் - பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்!

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஐந்து படுக்கை அறைகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பா.ஜ.கவுக்கு பதிலளித்த கெஜ்ரிவால்,
"அந்த வீட்டில் என்ன செய்கிறேன் என்று வேண்டுமானால் கேமராவுடன் வந்து படமெடுத்துச் செல்லுங்கள்" என்று சவால் விட்டுள்ளார்.
டெல்லி முதலமைச்சராக டிசம்பர் 28ம் தேதி பதவியேற்ற ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லி அருகாமையில் காஷியாபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நாள்தோறும் அவர் வீட்டின் முன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் அவ்விடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட, டெல்லி செக்ரடேரியட் அருகே இடவசதியுடன் ஒரு வீட்டை வாடகைக்கு தேடி வந்தார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கு டெல்லி பகவான்தாஸ் சாலையில் ஐந்து படுக்கைஅறைகள் கொண்ட இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. இதில் ஒன்றை வீடாகவும், மற்றொன்றை அலுவலகமாகவும் பயன்படுத்த அவர் ஒப்புக் கொண்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று நடைபெற்ற டெல்லி சட்டமன்றக் கூட்டத்தில் இது குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், "ஒரு வீட்டை அலுவலகமாகத் தான் பயன்படுத்தப் போகிறேன். தற்போது எனது காஷியாபாத் வீட்டிலேயே நான்கு படுக்கை அறைகள் உள்ளன. இப்போது அதை விட கூடுதலாக ஒரு அறை உள்ள வீட்டிற்குத் தான் போகிறேன். நீங்கள் வேண்டுமானால் காமிராவுடன் வந்து வீடு முழுவதையும் படம் பிடித்துக் கொள்ளுங்கள்" என்றார்.
இந்த நிலையில் பெரிய வீட்டுக்கு இடம் மாற வேண்டாம் என்று சமூக வலை தளங்கள் வாயிலாகவும், குறுஞ்செய்திகள் வாயிலாகவும் அவருக்கு யோசனை கூறப்பட்டன. இதைத் தொடர்ந்து இன்று பேட்டி அளித்த கெஜ்ரிவால், "எனது ஆதரவாளர்களும், நண்பர்களும் தெரிவித்த கருத்தைத் தொடர்ந்து ஐந்து பெட்ரூம் வீட்டுக்குச் செல்வதில்லை என்று முடிவெடுத்து இருக்கிறேன். சிறிய வீடு ஒதுக்கித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கிறேன்" என்றார்.
வேண்டுமானால் கேமராவுடன் வாருங்கள் - பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்! வேண்டுமானால் கேமராவுடன் வாருங்கள் - பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்! Reviewed by நமதூர் செய்திகள் on 01:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.