அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியாவின் மோசமான தருணம்! – இடதுசாரிகள்
புதுடெல்லி: இந்தியா – அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் “மோசமான தருணம்” என்று இடதுசாரிக் கட்சிகள் தெரிவித்துள்ளன. “இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது தனது 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் சிறந்த தருணம்” என்று பிரதமர் மன்மோகன் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்துக்கு இடதுசாரிக் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, டெல்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அணுசக்தியைப் பயன்படுத்தி இதுவரை ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யப்படவில்லை.
ஆனால், இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்காவுக்கு சாதகமாக அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டன. இது, இந்தியா – ஈரான் குழாய் எரிவாயுத் திட்டம், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிடையேயான உறவுகள் ஆகியவற்றைப் பாதித்துள்ளன.
ஆகையால், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் மோசமான தருணமாகும் என்று யெச்சூரி கூறினார். இதே கருத்தை வலியுறுத்திப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி, “அடுத்த பிரதமர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று மன்மோகன் சிங் கூறியது தவறு. 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியோ அல்லது நரேந்திர மோடியின் பாஜகவோ வெற்றி பெற்று ஆட்சிக்கு வரப் போவதில்ல” என்றார்.
அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது இந்தியாவின் மோசமான தருணம்! – இடதுசாரிகள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
20:16:00
Rating:
No comments: