தீண்டாமையால் பீகார் முதல்வர் அவமதிப்பு! - எஸ்.டி.பி.ஐ கண்டனம்!
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சமுதாயத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பான மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சில சக்தி வாய்ந்த மக்கள், தொடர்ந்து தன்னை தீண்டத்தகாதவராகவே நடத்துவதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளார் பீகார் முதல்வர் ஜிதன் ராம் மன்ஜி.
பீகாரில் நிதிஷ் குமாரின் பதவி விலகலுக்குப் பிறகு மாநில முதல்வராக பதவியேற்றவர் ஜிதன் ராம் மன்ஜி ஆவார். சமீபத்தில் மாதுபானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் அங்கு சென்றுள்ளார். பின்னர் அவர் கோவிலை விட்டு திரும்பிய பிறகு கோவிலையும் அங்குள்ள சிலையும் கழுவியதாக தனக்கு தகவல் கிடைத்ததாக மன்ஜி ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
தான் மாநில முதல்வராக இருந்தாலும் கூட இப்போதும் கூட, மகாதலித் வகுப்பை சேர்ந்தவர் என்பதால் சில சக்தி வாய்ந்த மக்கள் தன்னை தீண்டத் தகாதவாராகத்தான் நடத்துகின்றனர் என மிக வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
பீகார் முதல்வருக்கு ஏற்ப்பட்ட இந்த வருந்தத்தக்க நிகழ்வு வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தீண்டாமையை ஒழித்து, ஜாதி, மத, நிற பேதமைகளை நீக்க தொடர்ந்து சமூக அமைப்புகள் போராடி வருகின்றன. இருப்பினும் ஆங்காங்கே இலைமறை காயாக சில தீண்டாமை, சாதி, மதக் கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.
பீகார் முதல்வருக்கு ஏற்ப்பட்ட இந்த நிகழ்வு மூலம், கல்வியறிவு இல்லாத ஒடுக்கப்பட்ட ஏழைகள் தான் இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாகிறார்கள் என்ற பிம்பம் உடைபட்டுள்ளது. அரசின் மிக உயர் பதவிகளில் உள்ளவர்களையே தீண்டாமை கொடுமை சீண்டும்போது, கிராமங்களில் இதன் கொடுமையை சொல்லி மாளாது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆன நிலையிலும், தொடர்ந்து ஏதாவது ஒருவகையில் தீண்டாமை வெளிப்பட்டு வருகிறது. தீண்டாமைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அதன் கோரமுகம் அவ்வப்போது வெளிப்பட்டு வருகிறது.
ஆகவே தீண்டாமை கொடுமைக்கு எதிராக நடைமுறையில் உள்ள சட்டங்களை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டும். தீண்டாமை கொடுமையை களைய அனைத்து கட்சிகளும், சமூக அமைப்புகளும் இணைந்து களம் காண வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீண்டாமையால் பீகார் முதல்வர் அவமதிப்பு! - எஸ்.டி.பி.ஐ கண்டனம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:31:00
Rating:
No comments: