‘இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் சுட்டுடுவேன்!’

கையில் துப்பாக்கி தரப்பட்டுள்ளது குற்றம் நடக்காமல் தடுக்க. ஆனால், அப்பாவியைச் சுடுவதற்கு என்று பல போலீஸ்காரர்கள் நினைக்கிறார்கள். அதனுடைய விளைவுதான் ராமநாதபுரத்தில் நடந்துள்ள உயிர்ப்பலி. மிகமிகச் சாதாரண பிரச்னையை ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுபோனால் அதனை அவர்கள் எவ்வளவு பெரிய விபரீதமாக ஆக்குவார்கள் என்பதற்கும் இந்த சம்பவம் ஓர் உதாரணம்!
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த செய்யது முகம்மது என்பவருக்கும் மெக்கானிக் அருள்தாஸ் என்பவருக்கும் இடையே, கடந்த 14-ம் தேதி ஒரு தகராறு. அதுபற்றி எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் அருள்தாஸ் புகார் செய்துள்ளார். அதையடுத்து, செய்யது முகம்மதுவை போலீஸார் பிடித்துச் சென்று லாக்கப்பில் அடைத்தனர். அந்த ஸ்டேஷன் எஸ்.ஐ-யான காளிதாஸ் லாக் அப்பில் இருந்த முகம்மதுவை வெளியே அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அப்போது காளிதாஸை, முகம்மது கத்தியால் குத்த முயன்றதாகவும் தன்னைக் தற்காத்துக்கொள்ள காளிதாஸ் கைத்துப்பாக்கியால் முகம்மதுவை சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. முகம்மதுவின் கழுத்திலும் மார்பிலும் குண்டுகள் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே முகம்மது மரணம் அடைந்தார். காவல் நிலையத்தின் கதவுகளைப் பூட்டிய போலீஸார், உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். விஷயம் வெளியே பரவியதும் முகம்மதுவின் உறவினர்களும் ஊர் மக்களும் காவல் நிலையம் முன்பு திரண்டனர். முகம்மதுவின் உடல் பலத்த பாதுகாப்புடன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. காளிதாஸும் ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முகம்மது கொல்லப்பட்டதால் ஆத்திரம் அடைந்த உறவினர்களும் ஊர் மக்களும் சாலைமறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி-யான மயில்வாகனனும் முற்றுகையிடப்பட்டார். 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளதுரை தலைமையில் வந்த போலீஸ் டீம், தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது. மறுநாள் காலையில் ராமநாதபுரம் மருத்துவமனை முன்பு முகம்மது உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என 1,000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு நின்று, 'காளிதாஸை கைதுசெய்ய வேண்டும், அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.
கொல்லப்பட்ட முகம்மதுவின் உறவினர் சகுபர் அலி, ''மெக்கானிக் அருள்தாஸுடன் தகராறு செய்ததாகச் சொல்லி முகம்மதுவைப் போலீஸார் பிடித்துச் சென்றனர். அவரை ஸ்டேஷனுக்குள்வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதில் அவர் மரணம் அடைந்துவிட்டார். அதிலிருந்து தப்பித்துக்கொள்ள நினைத்த போலீஸார், சுமார் 2 மணி நேரத்துக்குப் பின், இறந்துகிடந்த உடலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குற்றத்தை மறைக்க எஸ்.ஐ-யை முகம்மது கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதாக நாடகம் நடத்தியுள்ளனர். முகம்மதுவைக் கொன்ற போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முகம்மது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும்'' என்றார்.
மக்கள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சேக் இப்ராகிம், ''செய்யது முகம்மதுவிடம் விசாரணை நடத்திய எஸ்.ஐ காளிதாஸ் குடிபோதையில் இருந்துள்ளார். போதையில் இருந்த அவர், தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளார். பொதுவாக என்கவுன்டர் செய்யும் போலீஸார் ஒரு ரவுண்டுக்கு மேல் சுடுவது இல்லை. ஆனால், இவரோ மூன்று ரவுண்டுகள் சுட்டுள்ளார். செய்யது முகம்மது மீதான புகார்குறித்து அவர் இறந்த பின்னரே எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். மேலும் இந்தப் படுகொலையை மறைத்து,  காளிதாஸைக் காப்பாற்றுவதற்காக 'சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதன்மூலம் நடந்த சம்பவத்தை மறைத்ததுடன் அதற்கான தடயங்களையும் அழிக்க முயற்சி செய்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுகளுக்குப் பின்னரும் காவல் நிலையச் சாவுகள் தொடர்ந்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது. எனவே எஸ்.ஐ மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்ய வேண்டும்'' என்றார்.
எஸ்.ஐ காளிதாஸ் குறித்து நம்மிடம் பேசிய போலீஸார், ''ஹாக்கி விளையாட்டு வீரரான காளிதாஸ், 2012-ல் பணிக்கு வந்தவர். எப்போதும் டென்ஷனுடன் இருப்பார். மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த இவருக்கும் அந்தப் பகுதி கவுன்சிலருக்கும் தகராறு, அடிதடி ஏற்பட்டு ஸ்டேஷன் வரை சென்றது. பின்னர் இருவரும் சமாதானம் ஆனதால் வழக்கில் இருந்து தப்பித்தார். 2014-ல் எஸ்.பி.பட்டினத்துக்கு மாறுதலாகி வந்தார். இறந்துபோன செய்யது முகம்மது குடித்துவிட்டு ஊர்க்காரர்களிடம் அவ்வப்போது பிரச்னை செய்து வருவது வழக்கம். அதுகுறித்து காளிதாஸின் கவனத்துக்கு வந்ததால், முகம்மதுவை விசாரித்த எஸ்.ஐ. காளிதாஸ், அவருக்குப் பலமுறை புத்திமதி சொல்லியுள்ளார். சம்பவம் நடந்த அன்று, டென்ஷனுடன் ஸ்டேஷனுக்குள் நுழைந்த காளிதாஸிடம், அங்கிருந்த போலீஸார் இந்தப் பிரச்னை  பற்றி சொன்னார்கள். 'அவன் எத்தனை தடவை சொன்னாலும் திருந்தவே மாட்டானா... கூட்டிட்டு வாங்க!’ என்று டென்ஷனுடன் சொல்லியிருக்கிறார். எஸ்.ஐ-யிடமும் முகம்மது பதில் பேசினார். இதுதான் அவரை டென்ஷனாக்கிடுச்சு. 'இதுக்கு மேல நீ ஒரு வார்த்தை பேசினாலும் சுட்டுடுவேன்’னு கோபத்துல சொல்லியிருக்காரு. அதுக்கு முகம்மது, 'உங்களுக்கு அந்த அதிகாரம் எல்லாம் இல்ல... சும்மா பூச்சாண்டி காட்டாதீங்க சார்’னு நக்கலா சொல்லவே, என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ஆத்திரத்தில் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுவிட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு மற்ற போலீஸ்காரர்கள் ஓடிவந்து பார்த்த பிறகுதான் எஸ்.ஐ விபரீதத்தை உணர்ந்திருக்காரு'' என்றனர்.
இந்த மரணம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஜுடிஸியல் நீதிபதி வேலுச்சாமி விசாரணை நடத்தியுள்ளார். அதன்பின், பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. உடலில் இருந்து இரண்டு குண்டுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரேதப் பரிசோதனைக்குப் பின், செய்யது முகம்மதுவின் உடலை அவரது உறவினர்களிடம் போலீஸார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால், காளிதாஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று அவர்கள் கூறிவிட்டனர். அதனால் மருத்துவமனை சவக்கிடங்கிலேயே முகம்மதுவின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு பதற்றமும் தொடர்கிறது.
அருள்தாஸுக்கும் முகம்மதுவுக்கும் என்ன பிரச்னை, இது சம்பந்தமாக அருள்தாஸ் புகார் செய்துள்ளாரா, அது பற்றி முகம்மது மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதா, முகம்மதுவை அழைத்து வருவதற்கு முன்பே எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விட்டதா, அவரை முதலில் விசாரித்தது யார், லாக் அப்பில் வைத்தது யார், முகம்மதுவை அடிக்கும்போது இருந்த போலீஸார் எத்தனை பேர், போலீஸ் அடியில் அவர் இறந்து போய்விட்டாரா, அதனை மறைப்பதற்காக எஸ்.ஐ காளிதாஸ் சுட்டாரா, ஏற்கெனவே முகம்மதுவை எஸ்.ஐ-க்கு தெரிந்துள்ளது என்றால் அவர்களுக்குள் பழைய பகை ஏதாவது இருந்ததா, அதனால் பழி தீர்த்துக் கொண்டாரா... இப்படி எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. காளிதாஸை இடைநீக்கம் செய்வதோடு இந்தப் பிரச்னை முடிவது இல்லை. ஸ்டேஷனுக்குள் யார் அழைத்து வரப்பட்டாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைமை தொடர்வது போலீஸுக்கு நல்லது அல்ல. மேலும், ஒரு எஸ்.ஐ ஏதோ ஒரு காரணத்துக்காக தவறு செய்துவிட்டால் அவரை உயர் போலீஸ் அதிகாரிகள் சேர்ந்து காப்பாற்ற முயற்சி செய்வது என்ன நியாயம்?
முகம்மது இனி உயிரோடு வரப்போவது இல்லை. ஆனால் இனி இன்னொரு முகம்மது லாக் அப்பில் சாகாமல் தடுக்க வேண்டியது போலீஸ் தலைமையின் கையில் இருக்கிறது!
இளையான்குடியில் ஒரு லாக் அப் மரணம்!
சிவகங்கை மாவட்டம் திருவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மலைராஜ். கடந்த 3-ம் தேதி, இளையான்குடி காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதைக் கண்டித்து, மலைராஜ் உறவினர்களும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தியாகி இமானுவேல் பேரவை உள்ளிட்ட அமைப்புகளும் போராட்டம் நடத்தினர்.
- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99908
‘இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் சுட்டுடுவேன்!’ ‘இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும் சுட்டுடுவேன்!’ Reviewed by நமதூர் செய்திகள் on 22:15:00 Rating: 5

No comments:

Powered by Blogger.