வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி!
கல்வியியலில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இடப்பட்ட சாபம்தான் வெயிட்டேஜ் முறை.
சமூகத்தின் ஒரு பிரிவு மக்களே ஆசிரியர்களாக ஆக முடியும் என்ற நெடுங்கால ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து, எல்லோரும் ஆசிரியர்களாகலாம் என்ற நிலை உருவானது சில பத்தாண்டுகளுக்கு முன்னர்தான். அப்படியிருந்தும், சொத்தையெல்லாம் விற்றோ, அடமானம் வைத்தோ கல்வியியல் பட்டயமோ பட்டமோ பெற்றவர்கள், வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது.
பதில் இல்லாத கேள்விகள்
வேலை இல்லாத வாழ்க்கையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள் முதல் தலைமுறை ஆசிரியர்கள். மறுபுறம், போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகளும் திணறிவருகின்றன. தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் (என்.சி.டி.இ.) தெளிவற்ற வழிகாட்டுதலே இந்தச் சிக்கலுக்கு அடிப்படைக் காரணம். இந்தச் சூழலில் சில கேள்விகள் எழுகின்றன. ஆசிரியராகப் பணிபுரிய அடிப்படைத் தகுதியான கல்வியியல் பட்டயம்/ பட்டம் பெற்ற ஒருவருக்கு, தகுதித் தேர்வு தேவையா? தேவையென்றால் என்ன காரணம்? அந்தப் படிப்புகளில் போதிய பயிற்சி வழங்கப்படவில்லை என்று என்.சி.டி.இ கருதுகிறதா? கணிதத்தில் பட்டம் பெற்ற ஒருவரை, அறிவியலில் பட்டம் பெற்ற ஒருவர் எழுதும் அதே 30 கேள்விகளுக்குப் பதில் எழுதச் சொல்வது சரிதானா என்ற கேள்வியே இல்லாமல் ஒரு தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுவிட்டது ஏன்?
பல குழப்பங்களுடன் வெளியான என்.சி.டி.இ-யின் வழிகாட்டுதலில், “பள்ளி நிர்வாகங்கள் மதிப்பெண் தளர்வு வழங்குவதற்குப் பரிசீலிக்கலாம்” என்றும் “ஆசிரியர் பணி நியமனத்தில் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றும் தெளிவற்ற பிரிவுகள் இருக்கின்றன. இவை குறித்து விளக்கம் கோராமலேயே தகுதித் தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால்தான், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறை பின்பற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலும் மிகுந்த குழப்பத்துடன் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது. ‘தகுதித் தேர்வு தகுதிப்படுத்தவா, வேலைவாய்ப்பு வழங்கவா?’ என்ற தெளிவு நீதிமன்றங்களுக்குக்கூட ஏற்படவில்லை.
தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு
ஆசிரியராகப் பணியாற்ற மேற்கொள்ளப்படும் தொழிற்பயிற்சிதான் கல்வியியல் பட்டயம்/ பட்டம். இந்தத் தகுதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப் படும் தகுதித் தேர்வில் ஒருவர் தேர்ச்சி பெறவில்லை என்றால், தன் வாழ்வாதாரத்துக்காக எந்தத் தொழிலை மேற்கொள்ள பயிற்சி எடுத்துக்கொண்டாரோ அந்தத் தொழிலை மேற்கொள்ள முடியாமல் போய்விடும். இது ஒருவரின் வாழ்வாதாரத்தையே பறிப்பதாகும். ‘வாழ்வாதாரத்துக்கான எந்தத் தேர்விலும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்’ என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது.
சட்டம் தொடங்கி, வழிகாட்டுதலை நடைமுறைப் படுத்தும் அரசாணை வரை மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பளிக்கப்பட்டது. எனினும், தமிழ்நாடு அரசு மதிப்பெண் தளர்வு வழங்காததால் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னர், இதுதொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம், தமிழ்நாடு அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதன்பின் மறு ஆய்வும் நடத்தப்பட்டது. சட்டமன்றத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த வரலாறு தெரியாமலா சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, மதிப்பெண் தளர்வை ரத்துசெய்து உத்தர விட்டது?
ஒரு தொழிலைச் செய்யவே கூடாது என்று பின் தள்ளப்பட்ட ஒரு பிரிவினருக்கு, அந்தத் தொழிலை மேற்கொள்ள வழங்கப்படும் முன்னுரிமைகள்தான் இட ஒதுக்கீடும் அதற்கான மதிப்பெண் தளர்வும். மதிப்பெண் தளர்வை ரத்துசெய்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்துக்கு எதிரானது.
கூடுதல் மதிப்பின் குழப்பம்
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனம் மேற் கொள்ளப்பட்டது. அதை மாற்றி, போட்டித் தேர்வு நடத்தி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் நடைபெற்றது. இவை எவற்றிலும் 12-ம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களுக்கு ‘கூடுதல் மதிப்பு’(வெயிட்டேஜ்) வழங்கப்பட்டது கிடையாது.
வழக்கு ஒன்றில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அரசு ஒரு குழு அமைத்திருப்பதாகவும், அந்தக் குழு தரும் பரிந்துரையின் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்வதாகவும் கூறியிருந்தார். நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. சென்னை உயர் நீதிமன்றம் 29.04.2014 அன்று வழங்கிய தீர்ப்பில் இந்தக் குழுவின் செயல்பாட்டைக் கடுமையாக விமர்சித்திருந்தது.
ஒரே நாளில் ஆந்திர, மேற்கு வங்க மாநில நடைமுறைகளைப் பின்பற்றி தமிழ்நாட்டுக்கு ஒரு நடைமுறை வகுக்கப்பட்டது. அந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் நடைமுறையின் சாதக, பாதக அம்சங்களை இந்தக் குழு ஆய்வுசெய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்தது. மேலும், வேறு அறிவியல்பூர்வமான வகையில் கூடுதல் மதிப்பு அளித்து, பணி நியமனம் மேற்கொள்ளலாம் என்பதை அரசு ஆராய்ந்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
இவ்வாறான கருத்துகள் நீதிமன்றத்தால் வெளியிடப்பட்ட பிறகும் முழுமையான மறு ஆய்வு மேற்கொள்ளாமல் ‘அடுக்குமுறைக்குப் பதிலாக ஒவ்வொரு மதிப்பெண் சதவீதத்துக்கும் வெயிட்டேஜ்’ என்ற முறையைக் கொண்ட அடுத்த அரசாணை வெளியிடப்பட்டது.
எழுத்தறிவற்ற குடும்பச் சூழலில் பிறந்து போராடி, ப்ளஸ்-டூ முடிக்கும் மாணவர்களில் பலர் முதலில் தேர்ச்சி பெறத் தவறி, அதற்குப் பின் தேர்ச்சி பெற்று, தன் அறிவை விரிவுபடுத்தி, போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று, அரசுப் பணியில் பல நிலைகளில் பணியாற்றிவருகின்றனர். தன் தகுதியை மேம்படுத்திக்கொண்ட ஒருவரை, அவர் ப்ளஸ்-டூவில் குறைந்த மதிப்பெண் எடுத்தார் என்ற காரணத்துக்காக வேலைவாய்ப்பில் பின்னுக்குத் தள்ளுவது நியாயமற்ற நடைமுறை.
2012-ல் தொடங்கி முற்றுப்பெறாமல் தொடர்ந்துகொண் டிருக்கும் ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவர அரசு ஏன் முயற்சிக்கவில்லை? வெயிட்டேஜ் என்பது நால்வர் குழு உருவாக்கமே தவிர, அமைச்சரவை மேற்கொண்ட கொள்கை முடிவல்ல. எனவே, மதிப்பெண் தளர்வு வழங்குதல், வெயிட்டேஜ் முறையைக் கைவிடுதல் ஆகிய கோரிக்கைகளை உரிய முறையில் அரசு பரிசீலிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் தளர்வு வழங்கி, பணி நியமனத்தில் பதிவு, மூப்பு மற்றும் வயது ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்து பணி நியமனங்களை மேற்கொள்வது மட்டுமே இந்தச் சிக்கலைச் சுமூகமாகத் தீர்க்க வழி செய்யும்.
- பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு, பொதுச் செயலாளர்,பொதுப்பள்ளிக்கான மாநில மேடை,
தொடர்புக்கு: tnpcommonschool@gmail.com
Thanks to : tamil.thehindu.com
வெயிட்டேஜ் என்ற சமூக அநீதி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:57:00
Rating:
No comments: