கல்வி தர வேண்டிய அரசு சாராயத்தையும், இட்லியையும் தருகிறது: எஸ்.ஐ.ஓ. மாநாட்டில் டாக்டர் மொய்தீன் உரை


கல்வி தர வேண்டிய அரசு சாராயத்தையும், இட்லியையும் தருகிறது: எஸ்.ஐ.ஓ. மாநாட்டில் டாக்டர் மொய்தீன் உரை

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) மாநில மாநாடு 19.10.2014 திங்கள் கிழமை திருச்சியில் நடைபெற்றது. ‘மாற்றத்தை வழிநடத்துவோம்’ மையக்கருத்தாக கொண்ட அந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் மொய்தீன் கல்வியைத் தர வேண்டிய அரசு சாராயத்தையும், இட்டிலியையும் தருகிறது!’ என்றார்.

கொட்டும் மழையில் நடந்த மாநாட்டில் பெருந்திரளமாக மாணவர்கள் திரண்டு வந்திருந்தனர்.

எஸ்.ஐ.ஓ.-வின் மாநில தலைவர் சையது அபுதாஹிர் கொடியேற்றி மாநாட்டை துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாநில செயலாளர் சிக்கந்தர் பாஷா, கொடி விளக்கத்தை மாணவர்களின் மத்தியில் எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ‘மூட்டா’ அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.விஜயகுமார், டாக்டர் மைதீன் அப்துல் காதர் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழக மாநில தலைவர் ஷப்பீர் அஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஷப்பீர் அஹமது துவக்க உரையில், ‘இறைவனின் விதிப்படியே அவனின் படைப்புகள் யாவும் செயல்படுகின்றன. ஆனால் இறைவன் வழங்கிய மனிதனின் சுய அதிகாரத்தை மனிதன் துஷ்பிரயோகம் செய்கிறான். இன்றைய கல்வி திட்டம் அறிவாளி பேய்களை (Intellectual Devil) உருவாக்குகிறது. நமக்கு தேவை வெறும் கல்வி அல்ல, விழுமம் சார்ந்த கல்வியே!.’ – என்றார்.

எஸ்.ஐ.ஓ. – வின் மாநில தலைவர் சையது அபுதாஹிர், ’1982-இல் துவங்கப்பட்ட மாணவ அமைப்பானது கல்வி மற்றும் ஒழுக்க தளத்தில் முனைப்பாக செயல்படுகிறது.

இந்தியா மிக அழகிய தேசம், இங்குள்ள கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கம், ஒற்றுமை வேறெங்கும் காண்பது சிரமம். தமிழகம், போராட்டங்கள் பல நடந்த மாநிலம். இங்கு நம் தமிழ் அடையாளம் அழிக்கப்படுகிறது, சாதி பிரச்சினைகள் மேலோங்கிவிட்டது, பெண்களுக்கு பாதுகாப்பில்லை, ஆசிரியரையும் மாணவன் கொலை செய்கிறான்! ஏன் இப்படி நடக்கிறது? காரணம், வலுவான கல்வி திட்டம் இல்லை’ என்றார்.

மேலும் அவர் பேசுகையில், ‘பொது வெளியில் நடப்பது யாவும் கல்வி வளாகத்திலும் நடந்துகொண்டிருக்கிறது. கிருமினல்களை உருவாக்கும் கல்வி திட்டத்துக்கு மாற்றாக ஒழுக்கம், அக்கறை, அமைதி போன்றவற்றை புகட்டுவது மூலமே சமூகம் மறுமலர்ச்சியடைய முடியும்’ – என்று குறிப்பிட்டார்.

உயர் கல்வி-மீளாய்வு என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றிய பி. விஜய்குமார், ‘சுதந்திர இந்தியாவில் எந்த ஆட்சியாளரும் கல்வியில் உரிய அக்கறை காட்டவில்லை’ – என்றார். உயர் கல்வியில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பின்தங்கி இருப்பதை அப்போது அவர் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார். மேலும் அவர் தனது உரையில், ‘கல்வியில் ஊடுருவியுள்ள அரசியல், வரலாற்று திரிபு, சமஸ்கிருத திணிப்பு போன்றவற்றை கல்வித்துறையின் நிதி ஆதாரத்தில் அரசு நிறைவேற்றி வருவதை கண்டித்தார். இதுபோன்ற சிக்கல்களை தீர்க்க மாணவர்கள் கரம் கோர்த்துப் போராடினால்தான் வெற்றி பெற முடியும்’ – என்றார்.

டாக்டர் சேக் மைதீன், ‘கல்வி அனைத்து சமூகத்திற்கும் சமநிலையில் கிடைப்பதில்லை. அதற்கு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் தடையாக நிற்பதை விளக்கினார். உயர் கல்வி என்றால் என்ன என்ற அடிப்பை கேள்வி மூலம் உரையை துவங்கிய அவர் மாணவர்களிடம் பல கேள்விகளை எழுப்பி பதிலளித்தார். உயர் கல்வி குறித்து விளக்குகையில் ‘பொருளாதாரத்தை மைய்யமாக கொண்டு கல்வி அமையக்கூடாது. அப்படி இருப்பதால் தான் ‘சைபர்-கிரைம்’ குற்றவாளிகளும் பங்கு சந்தையில் மோசடி செய்பவனும் படித்தவனாகவே இருக்கின்றான். கல்வி அவரவர் விருப்பத்திற்கிணங்க இருக்கவேண்டும். ஆனால், துரதிஷ்டவசமாக நாம் பொறியியலுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம்’ – என்றார்.

மேலும் அவர் பேசும்போது, ‘கல்வி மாற்றம் காண்பதற்கு வெறும் அரசை மட்டும் நாம் குறை கூறக் கூடாது. மாணவர்கள், பெற்றோர், அரசு, தனியார் கல்வி கூடங்கள் அனைவரிடத்திலும் மாற்றம் வேண்டும் என்பதை அவர் வலியுறித்தினார். கல்வி தரவேண்டிய அரசு இன்று சாராயத்தையும், இட்லியையும் வழங்கிகொண்டிருக்கிறது. ஆனால், தனியார் முதலாளிகளோ கல்வியை கொடுத்துகொண்டிருக்கிறார்கள் என்ற அவர், ‘தனியாரை முற்றாக புறக்கணிக்காமல் அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் தனியாரின் மூலதனம் இடம்பெற்றால் சமூக மேம்பாட்டிற்கு உதவும்’ – என்றும் யோசனை சொன்னார்.
கல்வி தர வேண்டிய அரசு சாராயத்தையும், இட்லியையும் தருகிறது: எஸ்.ஐ.ஓ. மாநாட்டில் டாக்டர் மொய்தீன் உரை கல்வி தர வேண்டிய அரசு சாராயத்தையும், இட்லியையும் தருகிறது: எஸ்.ஐ.ஓ. மாநாட்டில் டாக்டர் மொய்தீன் உரை Reviewed by நமதூர் செய்திகள் on 08:31:00 Rating: 5

No comments:

Powered by Blogger.