உரிமை, இரத்தல் அல்ல!

போபால் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் விஷவாயுக் கசிவினால் ஏற்பட்ட மிகக் கொடூரமான தொழிற்சாலை விபத்து நிகழ்ந்து டிசம்பர் மாதத்துடன் 30 ஆண்டுகளாகப் போகின்றன. ஏறத்தாழ ஐந்தரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளும் மூளை வளர்ச்சி இல்லாமலும், உடல் வளர்ச்சி இல்லாமலும், ஊனமாகவும் பிறந்தார்கள் என்
பதுதான் அதைவிட வேதனை. எல்லாவற்றையும்விட சோகமானது, அப்படி பாதிக்கப்பட்ட பலருக்கும் 30 ஆண்டுகளாகியும் முழுமையான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை என்பதுதான்.
இயற்கைச் சீற்றங்களால் உலகின் பல நாடுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பேரழிவும் ஏற்பட்டிருக்கிறது. அணு ஆயுதத்தாலும், அணு உலை வெடிப்பினாலும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஏற்பட்டிருப்பதுபோல தொழிற்சாலை விபத்துகளில் இந்த அளவுக்கு பாதிப்பும், உயிரிழப்பும் வேறு எந்த நாட்டிலாவது ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.
1976-இல் இத்தாலியிலுள்ள மிலன் நகரத்தில் ஏற்பட்ட செவேசோ விபத்தும், 1986-இல் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சான்டோஸ் கெமிக்கல்ஸ் விபத்தும், மெக்சிகோ வளைகுடாவில் ஆழ்
கடல் எண்ணெய்க்கசிவு விபத்தும் சுட்டிக் காட்டப்பட்டாலும் அவை எதுவும் போபால் விஷவாயுக் கசிவுக்கோ, இந்தியாவில் ஏற்பட்ட ஏனைய தொழிற்சாலை விபத்துகளுக்கோ நிகரானவை அல்ல. உலகெங்கிலும் அணு உலை மின்சக்தி உற்பத்தி நிலையங்களில் ஏற்படும் விபத்துகளைத் தொழிற்சாலை விபத்துக்களுடன் ஒப்பிடுவது தவறு.
மும்பையிலும் சென்னையிலும் அடுக்குமாடிக் கட்டடங்கள் இடிந்து விழுகின்றன. ஆந்திரத்தில் எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்கள் வெடித்துச் சிதறுகின்றன. மேற்கு வங்கத்திலும், சத்தீஸ்
கரிலும் இரும்பு உருக்கு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன. பல தனியார் நிறுவனங்களில் நடக்கும் விபத்துகளோ, அதனால் ஏற்படும் பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ வெளியில் தெரிவதே இல்லை என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில் நூற்றில் ஒரு நிறுவனத்தில்தான் பாதுகாப்பு அதிகாரி என்று ஒருவர் இருக்கிறார். தொழிற்சாலைகள் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இயங்குகிறதா என்பதை உறுதிப்படுத்த, 2011 நிலவரப்படி 743 கண்காணிப்பாளர்கள்தான் இந்தியாவில் இருந்தனர். தொழிற்சாலைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயற்றப்பட்டிருக்கும் சட்டங்
களும் விதிகளும் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அரசு, அதற்குப் போதுமான அதிகாரிகளை நியமிக்கவோ, நிதி ஒதுக்கீடு செய்யவோகூட முன்வரவில்லை என்கிற அவலத்தைப் பற்றிக் கேள்வி கேட்கக்கூட இந்தியாவில் யாருமில்லை.
விபத்து நேராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள்தான் இல்லை. விபத்து ஏற்பட்டால், முறையான விசாரணை நடத்தவோ, இழப்பீடு வழங்கவோ, தவறுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்கவோ முறையான கண்காணிப்பு அமைப்பு இருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. விபத்து ஏற்பட்டுவிட்டால் உடனே பிரதமரோ, முதல்வரோ இழப்பீடு அறிவித்துத் தங்களது கடமையை முடித்துக் கொண்டு விடுவார்கள். இழப்பீடுகளுக்கும், விபத்துப் பற்றிய விசாரணைக்கும் தொடர்பே இருக்காது.
கடந்த ஜூன் மாதம் ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட "கெய்ல் இந்தியா' நிறுவனத்தின் எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் இறந்தனர். இது பற்றிய விசாரணை அறிக்கையில், இழப்பீடு பற்றியோ, இந்த விபத்துக்குக் காரணமானவர்கள், கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் பற்றிய குறிப்போ கிடையாது. தவறுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட்டால்தானே, மீண்டும் தவறு நிகழாமல் கவனமாகப் பணியாற்றுவார்கள்?
இழப்பீடு தொடர்பான இந்தியக் குற்றவியல், குடிமையியல் சட்டங்கள் தெளிவாக இல்லை என்பதை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இழப்பீடுக்கான சட்ட திட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவில், தொழிற்சாலைச் சட்டம், 1948 அல்லது பொது இழப்பீடுக் காப்பீட்டுச் சட்டம், 1991 (டன்க்ஷப்ண்ஸ்ரீ கண்ஹக்ஷண்ப்ண்ற்ஹ் ஐய்ள்ன்ழ்ஹய்ஸ்ரீங் அஸ்ரீற், 1991) ஆகியவற்றின் அடிப்படையில்தான் போபால் உள்ளிட்ட விபத்துகளில்கூட இழப்பீடு நிர்ணயிக்கிறோம்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சட்ட ஆணையம் ஒருங்கிணைந்த இழப்பீட்டுச் சட்டம் இயற்றவும், கவனக்குறைவுக்கும், தவறுகளுக்கும் உரிய தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதகமான இழப்பீட்டு நிர்ணயத்திற்கு வழிகோலவும் உடனடியாக அரசு முன்வர வேண்டும். இழப்பீடு என்பது உரிமை, யாசகம் அல்ல!
- www.dinamani.com
உரிமை, இரத்தல் அல்ல! உரிமை, இரத்தல் அல்ல! Reviewed by நமதூர் செய்திகள் on 23:14:00 Rating: 5

No comments:

Powered by Blogger.