மருந்துகளுக்கே நோய் என்றால்...


புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன.
மருந்து நிறுவனங்களும், மருத்துவர்களும் அமைக்கின்ற கூட்டணி, நோயாளிக்குக் குணத்தை கொடுக்கும் போர்வையில், பணத்தைப் பறிக்கும் கொடுமையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.
மகத்துவ மிக்க மருத்துவத் துறையில் மனிதநேயத்தையும், சேவையுணர்வையும் தனது முகவரியாய்க் கொண்ட முன்மாதிரி மருத்துவர்கள் பலரும் உண்டு. ஆனால், விழுமியங்களைத் தொலைத்தவர்களின் விளைச்சல் மிக வேகமாக அதிகரித்து வருவதையும் மறுக்க முடியாது.
கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு வீழ்ச்சி ஏற்படும். மிருக உணர்வுகளும் வளர்ந்து விடும். எனவேதான், அறஞ் சார்ந்த அரசுகள் கல்வியையும், மருத்துவத்தையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றிருந்தன.
இன்று அரசாங்க மருத்துவமனை, ஏதுமற்ற ஏழைகள் மட்டும் உயிருக்குத் துணிந்து போகும் இடமாக்கப்பட்டுள்ளது (சில விதிவிலக்குகள் உண்டு).
ஆனால், தனியார் மருத்துவமனைகளோ, வீதிகள் தோறும் புற்றீசல்போலப் பெருகியுள்ளன.
ஊடகங்களில், பெரு நிறுவனங்கள் தயாரிக்கும் நுகர்வுப் பொருள்களின் விளம்பரங்களோடு, மருத்துவமனை விளம்பரங்களும் போட்டி போடுகின்றன. மருத்துவமனைகள் ஆடித் தள்ளுபடி அறிவிக்காததுதான் பாக்கி.
ஒரு நோயாளியிடம் பிரபல மருத்துவர், குறிப்பிட்ட இடத்தில் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறுகிறார். அந்த நோயாளி, கட்டணம் குறைவான இடத்தில் ஸ்கேன் எடுத்துக் கொண்டு, அதை மருத்துவரிடம் காட்டுகிறார்.
மருத்துவர் முகத்தில் எரிமலை வெடிக்கிறது. "நான் சொன்ன இடத்தை விட்டுவிட்டு எங்கோ போய் எடுத்துள்ளீர்கள். இது உயிர் விஷயம், இதிலா கணக்குப் பார்ப்பது? பாருங்கள் தெளிவாக இல்லை. நான் சொன்ன இடத்தில் போய் எடுத்து வாருங்கள்' என்று விரட்டுகிறார்.
நோயாளியோ, தான் ஸ்கேன் எடுத்த இடத்திற்குக் கோபமாகச் சென்றபோது, அவர் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்திருந்த அங்கிருந்த பொறுப்பாளி, "டாக்டர் ஸ்கேன் தெளிவாக இல்லை எனத் திட்டியிருப்பாரே' என்று கேட்க, ஆச்சர்யமான அந்த நோயாளி "ஆமாம்' என்கிறார்.
"அதே ஸ்கேனை இதோ இந்த கவரில் போட்டுத் தருகிறேன். எடுத்துப் போங்கள்' என்று கூறி மருத்துவர் பரிந்துரைத்த நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட உறையில் அதை இட்டுத் தருகிறார்.
மீண்டும் மருத்துவரிடம் போன நோயாளியிடம் மருத்துவர் சொல்கிறார்:
"பார்த்தீர்களா. இது எவ்வளவு தெளிவா இருக்குன்னு. முன்னாடியே இங்கே போயிருந்தா உங்களுக்கு வீண் செலவு ஏற்பட்டிருக்காதல்லவா?'
எல்லா மருத்துவர்களுமே இப்படியா என்றால் நிச்சயமாக இல்லை. ஆனால், கணிசமான தொகையினர், இப்படித்தான் இயங்குகிறார்கள் என்பது உண்மை.
மருந்து நிறுவனங்கள், மருத்துவர்கள் நடத்தும் மருத்துவமனைக்குத் தேவையான உபகரணங்களை, மேசை, நாற்காலி, படுக்கை உள்பட வாங்கித் தருகின்றன.
கருத்தரங்குகளுக்கோ, பணியை முன்னிட்டோ, அல்லது இன்பச் சுற்றுலாவாகவோ, மருத்துவர் வெளியூர்கள் அல்லது வெளிநாடுகள் செல்லும்போது, விமானப் பயணம், நட்சத்திர விடுதிகளில் தங்குதல் உள்ளிட்ட ஏற்பாடுகளை மருந்து நிறுவனங்கள் மனமுவந்து செய்து தருகின்றன.
நூற்றுக்கு நூறு தொடங்கி நூற்றுக்கு ஐநூறு தாண்டி, சலுகை மருந்துகளைத் தருகின்றன. மருத்துவர் தனது மருத்துவமனையிலேயே மருந்தகமும் வைத்திருந்தால் நோயாளிகள் சுரண்டப்படும் விதம் சொல்லி மாளாது.
மருந்து நிறுவனங்கள் சில மாத(ா)ந்திர கையூட்டுகளை மருத்துவர்களுக்கு அளிக்கின்றன. இப்படி ஏராளமான சலுகைகளும், லஞ்சங்களும், தாராளமாகத் தரப்படுகின்றன.
இதற்கு மருத்துவர்கள் செய்ய வேண்டிய ஒரே கைம்மாறு அந்நிறுவனத்தின் மருந்துகளை, அதிகமாக எழுதி, நோயாளிகளை வாங்கச் செய்ய வேண்டும்.
சில மருத்துவர்கள் சிறிய நோய்க்கும் பெரிய பட்டியலே எழுதுவார்கள். காரணம், அவர் பல நிறுவனங்களுக்கும் கடமைப்பட்டவர். அதிக மருந்துகள் உட்கொள்வதால், குடலில் அமிலப் பாதிப்பு வருமல்லவா அதற்கும் சேர்த்து ஒரு மருந்தை எழுதி விடுவார்.
மருத்துவர் தந்த அதீத மருந்துகளின் பக்க விளைவு மெதுவாகத் தெரியும். ஒரே வகையான மருந்துகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கேற்ப, பெரும் விலை வேறுபாட்டுடன் சந்தையில் உள்ளன.
நான்காம் தலைமுறை எதிர் உயிரி மருந்துகளில் 4th Generation Anti-biotic) Cefxime என்ற மருந்தை ஒரு நிறுவனம் 11 ரூபாய்க்கும் (Cipla-omnix) இன்னொரு நிறுவனம் 6 ரூபாய்க்கும் (Mankind-Mancet) விற்பனை செய்கிறது.
மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் சில வகையான மருந்துகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது. "ஜெனரிக் மெடிசன்ஸ்' (மூலப்பொருள் பெயரிலான மருந்துகள்) அதிகம் பிரபலமாகாத நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை. ஆனால், முறையான அனுமதியே பெறாமல் இந்தியா முழுவதும் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதாக ஒரு மருத்துவர் நம்மிடம் தெரிவித்ததோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளையும் கூறினார்.
உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள Analgin, Cisapride, Properido, Furazolidone,  Nimesulid, Nitrofurazone, Phenol Phthalein  உள்ளிட்ட பல மருந்துகள் நம் நாட்டில் தங்கு தடையின்றி சந்தையில் விற்கப்படுவதைக் கவலையோடு பகிர்ந்து கொண்டார்.
இந்த மருந்துகள் பிற நாடுகளில் தடை செய்யப்படுவதற்கு எலும்புகளை பலவீனப்படுத்துதல், மன அழுத்தம் ஏற்படுத்தல், நாடித் துடிப்பை சீர்குலைத்தல், புற்றுநோய் உருவாக்குதல், கல்லீரலைப் பாதித்தல் உள்ளிட்ட மிக மோசமான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. உலகில் அதிக மனித வளம் கொண்ட நம் தாய்த்திருநாட்டுக்கு குடிமக்களின் உடல்நலம் குறித்த அரசின் அக்கறையை மேற்கண்ட மருந்துகளின் அமோக விற்பனை காட்டுகின்றது.
காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் தகவல்கள் நம்மைப் பதற வைக்கின்றன. காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.
மருந்துக் கடைகளில், காலாவதியாகித் தேங்கிவிட்ட மருந்துகளை ஒரு கொடுங் கும்பல் சேகரித்துச் சென்று காலாவதி தேதியை மாற்றி, புது லேபிள் ஒட்டி, மறுசுழற்சி செய்கின்றனவாம். மருந்தை வாங்கியதும், காலாவதி தேதியை முதலில் பார்ப்போம். தேதியே போலியான தென்றால்?
நோயாளி நுகர்வோர் என்னதான் செய்வது?
எந்த மருந்து வாங்கினாலும், அதற்கு பில் வாங்க வேண்டும். மருந்து குறித்து சந்தேகம் இருந்தால், மருந்தின் மேற்புறம் அச்சிடப்பட்டுள்ள Batch எண்ணை, மருந்து நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்தால், உண்மையான காலாவதி தேதி தெரிந்துவிடும்.
ஒருசமயம், Batch எண்ணே போலியாக இருந்தால், எந்தத் தகவலும் வராது. அந்த விவரங்களை நகல் எடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
எல்லா நோயாளிகளுக்கும் இயல்கிற செயலா இது?
நோயாளிகள் பெற வேண்டிய விழிப்புணர்வு குறித்து சமூக அக்கறையுள்ள ஒரு மருத்துவர் கூறியதாவது:
மருத்துவர்கள் எழுதும் மருந்துகள், அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும்.
மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் (Prescribtion) நோயின் தன்மை (அ) பெயர் எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். இவ்வாறு நோய் குறித்த விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயம்.
வெளியூரில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர் குறிப்பிடும் பெயர்களிலேயே மருந்து தயாரித்துத் தருகின்றனவாம். அவர் மருந்து சீட்டில் உள்ள கடை தவிர பிற கடைகளில் அந்த மருந்து கிடைக்காது.
மருத்துவர்களின் சேவை மகத்தானது. அர்ப்பணிப்புணர்வும், தொழில் அறமும், சேவை உள்ளமும் கொண்ட ஏராளமான மருத்துவர்கள், மக்களின் மனங்களை ஆள்கிறார்கள் என்பது உண்மை.
குணமாக்கும் மருத்துவத்தைப் பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது, பஞ்சமா பாதகத்தினும் கொடிய பாதகம்.
மருந்து நிறுவனங்களின் நடவடிக்கைகளை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்.
தனியார் பள்ளி கல்விக் கட்டணங்களை அரசே நிர்ணயித்தது போல, மருந்துகளுக்கும் அதற்குரிய நியாயமான விலையை அரசே மக்கள் நலச் சிந்தை கொண்ட நிபுணர் குழுவை நியமித்துத் தீர்மானிக்க வேண்டும்.
நோய் வந்தால் மருந்துகள் எடுக்கலாம்; மருந்துகளுக்கே நோய் என்றால்...

- பேராசிரியர். ஹாஜா கனி 
மருந்துகளுக்கே நோய் என்றால்... மருந்துகளுக்கே நோய் என்றால்... Reviewed by நமதூர் செய்திகள் on 00:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.