பருத்தியில் வெள்ளை ஈ, தத்துப் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
பருத்தியில் வெள்ளை ஈ மற்றும் தத்துப் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை தெரிவித்துள்ளார் ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் பி. வெங்கடேசன்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் நிகழாண்டு 31,600 ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி பயிராக பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் தாக்கிய இலைப்பேன்கள் மற்றும் ஆல்டர் நேரியா இலைக்கருகல் நோயினால், ஏறக்குறைய 50% பருத்தி பயிர்கள் பாதிக்கப்பட்டு மகசூல் இழப்பு ஏற்பட்டது. தற்போது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளை உரிய நேரத்தில் மேற்கொண்டதன் பயனாக, பருத்தி பயிர்கள் மீண்டும் துளிர்விட்டு 10 முதல் 60 சப்பைகள் வரை காணப்படுகிறது.
இந்தத் தருணத்தில், பருத்தி செடிகளில் வெள்ளை ஈக்கள், தத்துப் பூச்சிகளின் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. பச்சை தத்துப் பூச்சிகளின் தாக்குதலால், பருத்தி இலைகளின் ஓரங்கள் வெளிர் மஞ்சள் நிறமாக, பின்னோக்கி வளைந்து காணப்படும். பிறகு, நெருப்பில் எரிந்தது போன்று இலைகள் சிவப்பாக மாறி கொட்டிவிடும்.
வெள்ளை ஈக்களின் தாக்குதலினால், பருத்தி இலைகள் தடிமனாக மாறுவதோடு நிறமிழந்து காணப்படுகின்றன. இவை பருத்தி செடிகளின் இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுவதே காரணம்.
மேலும், ஒருசில பகுதிகளில் மீரிட் நாவாய் பூச்சியின் தாக்குதலால் சப்பைகள் பழுப்பு அல்லது கருமை நிற புள்ளிகளுடன் கொட்டுகின்றன.
இவற்றின் அதிக தாக்குதலுக்கு முக்கிய காரணமாக, ஒரே வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துதல், தொடர்ந்து வறண்ட வானிலை, காற்றில் குறைந்த ஈரப்பதமாகும்.
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த, ஓர் ஏக்கருக்கு 4 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறிகளை வைத்து கட்டுப்படுத்தலாம். மேலும், சாறு உறிஞ்சும் பூச்சிகளின் அதிக தாக்குதலின் போது ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான தயாமித்தாக்சிம் 4 கிராம் அல்லது பிப்ரோனில் 10 மில்லி அல்லது அசிபேட் 20 கிராம் அல்லது அசிடமாபிரைடு 10 கிராம் இவற்றில் ஏதாவது ஒன்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி ஒட்டும் திரவம் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு, வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தை, பூச்சி தாக்கிய பருத்தி இலைகளுடன் நேரில் அணுகி ஆலோசனை பெற்று, மேலாண்மை முறைகளை கடைபிடித்து சாறு உறிஞ்சும் பூச்சிகளினால் ஏற்படும் சேதத்தை கட்டுப்படுத்தி பருத்தியில் அதிக மகசூல் பெறலாம்.
பருத்தியில் வெள்ளை ஈ, தத்துப் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனை
Reviewed by நமதூர் செய்திகள்
on
19:52:00
Rating:
No comments: