5 கோரிக்கைகளை நிறைவேற்ற சிறைக்குள் முகிலன் பட்டினிப் போராட்டம்!

முகிலன்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் சுப.உதயகுமாரனுடன் பங்கேற்ற முக்கியமானவர்களில் முகிலனும் ஒருவர். நொய்யல் ஆறு மாசுபடும் விவகாரம், காவிரி நதிநீர் பாதுகாப்பு, ஆற்று மணல் கொள்ளைத் தடுப்பு, தாதுமணல் கொள்ளைக்கு எதிராகக் குரல் கொடுப்பது, தாமிரபரணி தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதைத் தடுப்பது என மக்களுக்கான முக்கிய பிரச்னைகள் தொடர்பாக போராட்டக் களத்தில் பங்கேற்பதில் ஆர்வம் கொண்டவர். 
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியது தொடர்பாக இவர் மீது, தேசத்துக்கு எதிராக போர் தொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் இருக்கிறது. இதில் குறிப்பிட்ட சில வழக்குகளை மட்டும் தூசி தட்டிய காவல்துறையினர் அவை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர். ஆனால், தன்மீது மொத்தம் எத்தனை வழக்குகள் இருக்கின்றன என்பதைக் குறிப்பிடாதவரை நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதில்லை என அறிவித்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இதையடுத்து, அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், நிலத்தடி நீரை வர்த்தக நிறுவனங்கள் திருடுவதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற முகிலன் ஊருக்குத் திரும்பும்போது கூடங்குளம் காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று முதல் அவர் சிறைச் சாலையின் உள்ளேயே காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார். 
பாளையங்கோட்டை சிறை
ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் உண்ணாவிரத்தை தொடங்கி இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதன்படி, ’’மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க ஜெனிவா சென்ற வைகோ மீது, இலங்கைத் தமிழர் படுகொலையில் தொடர்புடைய சிங்கள முன்னாள் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். கம்யூனிஸ்ட் மூத்த தலைவரான நல்லகண்ணு மீது அம்பத்தூர் காவல்நிலையத்தில் போலீஸார் வழக்குத் தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர். அதை வாபஸ் பெற வேண்டும்.
நெல்லையில் பத்திரிகையாளர்கள் மீது பணகுடி காவல்நிலையத்தில் பொய் வழக்குத் தொடர்ந்து இருப்பதை ரத்து செய்ய வேண்டும். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் எத்தனை என்பதைத் தெரியப்படுத்த வேண்டும். அணு உலைக்கு எதிராகப் போராடிய அப்பாவி மக்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முகிலன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். அவரை சமாதானப்படுத்த சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
5 கோரிக்கைகளை நிறைவேற்ற சிறைக்குள் முகிலன் பட்டினிப் போராட்டம்! 5 கோரிக்கைகளை நிறைவேற்ற சிறைக்குள் முகிலன் பட்டினிப் போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:27:00 Rating: 5

No comments:

Powered by Blogger.