தனியாருக்கு விற்கக் கூடாது!
என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனம், வரலாறு காணாத அளவுக்குக் கடந்த 2016-2017ஆம் நிதி ஆண்டில் 2342.9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. அதன் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (அக்டோபர் 25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ‘நவரத்னா’ தகுதியைப் பெற்று சிறப்பாக இயங்கிவரும் என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனம், தமிழகத்துக்கும் தென்மாநிலங்களுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் வழங்கி, மிகப் பெரிய வளர்ச்சிபெற்று, தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துவருகிறது. 1956ஆம் ஆண்டு, என்.எல்.சி. நிறுவனம் நிறுவப்பட்டதிலிருந்து வரலாறு காணாத அளவுக்குக் கடந்த 2016-2017 நிதி ஆண்டில் 2342.9 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.
இத்தகைய சிறப்புடன் தன்னிகரற்று விளங்கும் பொதுத்துறையான என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை, 15 விழுக்காடு விற்பனை செய்வதற்கு நரேந்திர மோடி அரசு முடிவுசெய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. முதல் கட்டமாக 5 விழுக்காடு பங்குகளை இன்று முதல் விற்பனை செய்யவும், அதன் மூலம் 800 கோடி ரூபாய் திரட்டவும் திட்டமிடப்பட்டிருப்பதாக, மத்திய நிதி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில், பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்பனை மூலம் 72 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்றும், கடந்த ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி திரட்டப்பட்டு ள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பெருமையுடன் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றிய பொதுத்துறை நிறுவனங்களைச் சூறையாடி, தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு மோடி அரசு துடித்துக்கொண்டிருக்கிறது. ‘மேக் இன் இந்தியா’, ‘ஸ்டார்டப் இந்தியா’ என்று தொழில் தொடங்குவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களைக் கூவிக் கூவி அழைக்கும் மோடி அரசு, சாதனை படைத்துவருகின்ற என்.எல்.சி., பெல், என்.டி.பி.சி., என்.எச்.பி.சி போன்ற பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனைசெய்வது எதற்காக? லாபம் ஈட்டிவரும் பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கு பாஜக அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவது ஏன்?
என்.எல்.சி நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை வாஜ்பாய் அரசு 2002ஆம் ஆண்டு விற்பனைசெய்ய முடிவெடுத்தபோது, 2002 மார்ச் 19ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, என்.எல்.சி. பங்குகள் விற்பனைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன். அப்போது நாடாளுமன்றத்தில், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் என்னுடைய கோரிக்கைக்கு ஆதரவாக என்.எல்.சி. தனியார்மயமாக்கலை எதிர்த்தார்கள். பின்னர், பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்தித்து, இந்தத் திட்டத்தைக் கைவிட வற்புறுத்தினேன். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த வாஜ்பாய், மத்திய அரசின் கொள்கை முடிவையே மாற்றி, என்.எல்.சி தனியார்மயமாகாது என்று அறிவிப்பு செய்தார்.
வாஜ்பாயையே மறந்துவிட்ட மோடி அரசு, வாஜ்பாய் அரசின் கொள்கையையா பின்பற்றப்போகிறது? என்.எல்.சி. இந்தியா பங்குகள் விற்பனை செய்யும் திட்டத்தை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையேல், ஒட்டுமொத்த தமிழகமே ஓரணியில் நின்று போராட்டக் களத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்'' என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தனியாருக்கு விற்கக் கூடாது!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:41:00
Rating:
No comments: