டெங்கு: மக்கள் சாபம் சும்மா விடாது!

டெங்கு: மக்கள் சாபம் சும்மா விடாது!

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் மக்களின் சாபம் ஆட்சியாளர்களை சும்மா விடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி, பலர் பலியாகிவரும் நிலையில், தமிழக அரசு டெங்குவைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்துவருகின்றன. இந்தச் சூழ்நிலையில் இன்று (அக்டோபர் 14) பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெங்குக் காய்ச்சலுக்கு மணிக்கு ஓர் உயிர் பிரிந்துகொண்டிருக்கும் நிலையில், முதல்வரும், அமைச்சரும் புதுக்கோட்டையில் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் குதூகலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
டெங்குவுக்கு வாரத்துக்கு ஒருவர் உயிரிழந்துகொண்டிருந்தபோது, அதைக் கட்டுப்படுத்தத் தமிழக ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாக இப்போது ஒவ்வொரு நாளும் சராசரியாக 15 பேர் உயிரிழந்துகொண்டிருக்கின்றனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 18 பேர் டெங்குக் காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளனர். டெங்குக் காய்ச்சலின் தாக்கம் தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக அதிகரித்துவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக ஆட்சியாளர்கள் துரும்பைக்கூடக் கிள்ளிப்போடவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்குக் காய்ச்சலுக்கு 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் குழந்தைகளை டெங்குவுக்குப் பறிகொடுத்த மக்களின் ஓலம்தான் எதிரொலிக்கிறது. டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாத அரசின் கையாலாகத்தனத்தைக் காறி உமிழ்கின்றனர். தமிழக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டு, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ள மக்களைக் குணப்படுத்தி பத்திரமாக வீடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் சொந்தங்களை இழந்த மக்களின் சாபத்திலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தப்ப முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு: மக்கள் சாபம் சும்மா விடாது! டெங்கு: மக்கள் சாபம் சும்மா விடாது! Reviewed by நமதூர் செய்திகள் on 04:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.