பரோல் நீட்டிப்பு: அற்புதம்மாள் கோரிக்கை!

பரோல் நீட்டிப்பு: அற்புதம்மாள் கோரிக்கை!

‘பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு வழங்க வேண்டும்’ என அவருடைய தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் உட்பட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும் என அற்புதம்மாள் அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, அவரை பரோலில் விடுவிக்கக் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அவரது தந்தைக்கு மேலும் இரு அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளவுள்ளதாகவும் எனவே பரோலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அற்புதம்மாள் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அவரது பரோல் அக்.24ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, உடல்நலக் குறைவால் பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தந்தை குயில்தாசனுக்குத் தொடர் சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்த வேளையில் மகனின் பரோல் முடிவடைவதால் சிகிச்சையின் காலத்தில் பாதியிலேயே வீடு திரும்பியுள்ளார் குயில்தாசன். மேலும், பேரறிவாளனின் சகோதரிக்கும் சமீபத்தில் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை நடந்திருப்பதன் காரணமாக அவரும் மருத்துவசிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால் இருவரது மருத்துவசிகிச்சைக்கும் உடனிருந்து கவனித்துக்கொள்ள தனது மகன் பேரறிவாளனும் உடனிருந்தால் உறுதுணையாக இருக்கும் என்று எண்ணி பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அற்புதம்மாள் கோரிக்கை வைத்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் இதற்கான கோரிக்கை மனுவை அவர் நேற்று (அக்.20) வழங்கியுள்ளார்.
முன்னதாக, பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் நீட்டிப்பு வழங்கக்கூடாது என காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரோல் நீட்டிப்பு: அற்புதம்மாள் கோரிக்கை! பரோல் நீட்டிப்பு: அற்புதம்மாள் கோரிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:33:00 Rating: 5

No comments:

Powered by Blogger.