60 நாள்களில் 50 மாணவர்கள் தற்கொலை: காரணம்?

60 நாள்களில் 50 மாணவர்கள் தற்கொலை: காரணம்?

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் உள்ள பயிற்சி மையங்களால் 60 நாள்களில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சம்யுக்தா என்ற மாணவி கடந்த மூன்று மாதங்களாகப் பயிற்சி பெற்று வந்தார். பன்னிரண்டாம் வகுப்பில் 95 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற இவர் மருத்துவராகும் கனவோடு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 16) தற்கொலை செய்துகொண்டார். நீட் பாடத் திட்டங்களைச் சரியாகக் கையாள முடியவில்லை எனக் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் பலர் படிப்பு தொடர்பான மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டனர் எனக் குழந்தை உரிமைகள் செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்யுக்தாவின் தந்தை ஒரு டாக்ஸி டிரைவர். “நான் மற்ற பெற்றோர்களிடம் பேசும்போது, குழந்தைகள் என்ன விரும்புகிறார்களோ அதை புரிந்துகொண்டு அவர்களுக்குப் பிடித்த கல்லூரிகளில் பிடித்த பாடங்ளை எடுத்து படிக்க வையுங்கள் என்று சொல்வேன். ஆனால், என் மகளுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சமீபத்தில் நீட் பயிற்சி மையம் ஒன்றில் ஆசிரியர் மாணவர்களைக் கடுமையாகத் தாக்கும் வீடியோ காட்சி செல்போனில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து, முன்னணி பயிற்சி மையங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாணவர்கள் மன உளைச்சலால் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுவருவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், 8 மணி நேரத்துக்கு மேல் வகுப்புகள் நடத்தக் கூடாது, மாணவர்களைச் சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்தக் கூடாது, பயிற்சி பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு பாடம் கற்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழந்தை உரிமைச் செயல்பாட்டாளர் அச்சிதா ராவ், “இந்த நிறுவனங்கள் மிக நீண்ட காலமாக எந்தவொரு கேள்வியும் இன்றி இயங்கி வருகின்றன. மாணவர்கள்மீது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தும் பயிற்சி மையங்கள்மீது வழக்கு தொடர்ந்து, அவற்றை மூட வேண்டும். அதன் பின்புதான், மற்ற மையங்களுக்குப் பயம் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.
நன்றாகப் படித்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும் என்னும் எதிர்பார்ப்பைப் பெற்றோர்கள் குழந்தைகள்மீது திணிக்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களில் பள்ளி, கல்லூரிகளின் ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுவது எளிது. ஆனால், மாணவர்கள்மீது படிப்பைத் திணிக்கும் பெற்றோர்களை என்ன சொல்லுவது எனக் கேள்வி எழுப்புகிறார் உளவியல் நிபுணர் வீரபத்ர கந்த்லா.
60 நாள்களில் 50 மாணவர்கள் தற்கொலை: காரணம்? 60 நாள்களில் 50 மாணவர்கள் தற்கொலை: காரணம்? Reviewed by நமதூர் செய்திகள் on 23:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.