தமிழரின் உயிரைக் காக்க உதவிய கேரள மக்கள்!
தமிழரின் உயிரைக் காக்க கேரள கிராம மக்கள் போராடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய, திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குச் சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்ததால் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால் தற்போது சிறுநீரகம் பாதிப்படைந்த தமிழர் ஒருவருக்குச் சிகிச்சை அளிக்க கேரளாவில் இரு கிராம மக்கள் போராடி உதவி செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயன் என்பவர் தனது குடும்பத்துடன் கேரளா மாநிலம் கோட்டயத்தில் வசித்து வருகிறார்.இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக சிங்காவனம் மற்றும் பல்லம் ஆகிய இரு கிராமங்களிலுள்ள மக்களின் துணிகளுக்கு சலவை செய்யும் தொழிலைச் செய்து வரும் ஜெயனின் உழைப்பும் நேர்மையும் அக்கிராம மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்நிலையில், ஜெயனுக்கு கடந்த 7 ஆண்டுகளாகச் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆறு மாதங்களாகத் தொழிலையும் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். உடல்நலம் மிகவும் மோசமடைந்த நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்களும் கூறியுள்ளனர்.
அப்போது ஜெயனின் மனைவி மாரியம்மாள் தனது சிறுநீரகத்தை அளிக்க முன்வந்தார். இருப்பினும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ரூ.10 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் செய்வதறியாது இருந்த ஜெயனுக்கு இரு கிராம மக்களும் உதவி செய்ய முன்வந்தனர். அதாவது கடந்த அக் 15ஆம் தேதி அந்த கிராமங்களில் உள்ள 5 வார்டு உறுப்பினர்கள் இணைந்து, சுமார் 2,000 முதல் 2,500 வீடுகளுக்குச் சென்று பணம் திரட்டியுள்ளனர். குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.25,000 வரையிலும் மக்கள் பணம் கொடுத்துள்ளனர். 5 மணி நேரத்தில் ரூ.11 லட்சம் சேர்ந்தது. இது அவருடைய மருத்துவச் செலவைக் காட்டிலும் அதிகமானதாகும். கிராம மக்களின் அன்பால் திரட்டப்பட்ட இந்த பணத்தின் மூலம் அடுத்த மாதம் ஜெயனுக்கு அறுவை சிகிச்சை நடக்கவுள்ளது.
இது குறித்து அப்பகுதி கவுன்சிலர் தாமஸ் என்பவர் கூறியதாவது, “இரு மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முன்வராமல் திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன் இறந்ததையடுத்து கேரளாவில் மனித நேயம் இறந்துவிட்டதாகப் பேசப்பட்டது. தற்போது அந்த மனிதம், ஜெயனுக்காக உதவ முன்வந்த கிராம மக்களால் மீட்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தமிழரின் உயிரைக் காக்க உதவிய கேரள மக்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:44:00
Rating:
No comments: