மோடி பயணத்துக்குச் செலவழித்தது யார்?
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது 2003 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான அவரது விமான பயணங்களுக்குச் செலவழித்தது யார் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வத்ரா, ஆயுத வியாபாரி ஒருவர் அளித்த டிக்கெட்டில் பிசினஸ் வகுப்பில் ஸ்விட்சர்லாந்து சென்று வந்ததாக பாஜக சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவரது விமானப் பயணத்துக்கு யார் செலவழித்தது என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, 2003 முதல் 2007ஆம் ஆண்டு வரையிலான மோடியின் விமானப் பயணங்களின் தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்றுள்ளார். அதில், அந்தக் காலகட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மோடி விமானத்தில் பயணித்துள்ளார் என்றும் அதற்காக 16 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் மனு சங்வி, “அந்தக் காலகட்டத்தில் மோடியின் பயணச் செலவு ரூ.16.56 கோடி. ஸ்விட்சர்லாந்து, தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளுக்கு மிகப் பெரிய தொழிலதிபர்களுடன் பயணித்துள்ளார். தனி விமானங்கள் அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பயணத்துக்கு செலவழித்தது யார் என்று அறிந்துகொள்ள இந்த தேசம் விரும்புகிறது. இதுதொடர்பாக 2007ஆம் ஆண்டு கேட்கப்பட்ட கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.
மோடி பயணத்துக்குச் செலவழித்தது யார்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:50:00
Rating:
No comments: