மக்களின் பொறுமையைச் சோதிக்கும் அரசின் போக்கு!
- மித்தாலி சரண்
இந்திய மக்களின் மனநிலையைப் போலவே டெல்லியின் வானிலையும் மாற்றமடைந்து வருகிறது. ‘வேவ்’ என்று அழைக்கப்பட்டு வந்த அலைகள் அனைத்தும் சாந்தமாகிவிட்டது. கொண்டாட்டங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டன. மோடி அரசு தொடங்கி மூன்றாண்டுகள் நிறைவடைந்துவிட்டது. மோடி அரசுக்கு மற்றொரு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நினைத்தவர்களும்கூட தற்போது கடுங்கோபத்தில் அரசை இழிவுபடுத்தி வருகின்றனர். வணிகர்கள், கடை உரிமையாளர்கள், பாஜகவின் முக்கியப் புள்ளிகள்கூட தங்களின் வருத்தத்தை வெளிப்படையாக விமர்சனம் மூலம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். சமூக ஊடகங்களும் வெளிப்படையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. மோடி எதிர்ப்பாளர்கள் மீதான பாய்ச்சல்களும் கிண்டல்களும் கூட அமைதியாகிவிட்டன.
தசரா பண்டிகையன்று கூடுதலாகக் கேலிகளையும் கிண்டல்களையும் உருவாக்குவதற்கு ஏற்ப மோடி ஒரு புதிய வாய்ப்பை வழங்கிவிட்டார். ராவணனின் உருவ பொம்மைமீது மோடி அம்பை விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மோடி அம்பை விட முயன்று இரண்டு முறை தோற்றுவிட்டார். மூன்றாவது முறையாக அம்பைத் தூக்கி வீச அது தவறாக விழுந்துவிட்டது. இத்தகைய வெட்கப்படுதலுக்குரிய தோல்விக்கு ஒரு மாபெரும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிண்டல்களும், கேலிகளும், கேலிச்சித்திரங்களும் ஏராளமாய் வரத்தொடங்கிவிட்டன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தன் முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைப் பாஜக விமர்சித்து வந்தது. ஆனால், தற்போது பாஜக தலைமையிலான அரசின் மீதே பொதுமக்கள் அதிருப்தியான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அரசு தன் மீது உருவாக்கி வைத்திருந்த பிம்பம் அதன் தவறுகளாலேயே உடைத்துக்கொண்டது.
அனைவரின் வங்கிக் கணக்குக்கும் 15 லட்சம் ரூபாய் செலுத்த யாருமே மோடி அரசை வற்புறுத்தவில்லை. ஏன் அத்தகைய வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்? பிறகு எதற்காகத் தேர்தல் தந்திரம் என்று நகைக்க வேண்டும்? தனது பெயர் பதிக்கப்பட்ட மிக விலையுயர்ந்த உடையை உடுத்த யாருமே மோடியை வற்புறுத்தவில்லையே. போலியான கிரெடிட் கார்டுகளை உற்பத்தி செய்வது போன்ற போலியான புகைப்படங்களை போட்டோஷாப் மூலமாக உருவாக்க யாருமே பாஜகவை வற்புறுத்தவில்லையே. மாநில அரசுகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில் வரலாற்றுக்குரிய பாலியல் ஒழுக்கவாதிகளை நியமிக்க யாரும் மோடியைத் தொந்தரவு செய்யவில்லை.
மாட்டிறைச்சி விற்பனையை ஒரு பிரச்னையாக உருவாக்கி, அதனால் உயிரிழந்த இஸ்லாமியர்கள், தலித்கள் குறித்து தொடர்ந்து மவுனம் சாதிக்க யாரும் அரசை வற்புறுத்தவில்லை. ஆதாரைப் பயன்படுத்த விருப்பமில்லாத குடிமக்கள்மீது ஆதார் அட்டையைத் திணிக்க யாரும் அரசை வற்புறுத்தவில்லை. ஒரு தகுதிவாய்ந்த ரிசர்வ் வங்கி ஆளுநரை தூக்கி எறிய யாரும் அரசை வற்புறுத்தவில்லை. கலாசாரம், உடை, மதம், பாலியல் பழக்கங்கள் குறித்துக் கற்றுக்கொடுக்க யாரும் அரசை வற்புறுத்தவில்லை. தேசியவாதத்தை தன் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்த யாரும் அரசை வற்புறுத்தவில்லை. அறிவியலை மதம் மற்றும் மூடநம்பிக்கைகளுக்குள் நசுக்கவோ, கல்வி நிலையங்களை இந்துத்துவா கற்பிக்கும் கூடங்களாகவோ மாற்ற யாரும் அரசை வற்புறுத்தவில்லை.
வங்கி வசதிகள், இணைய வசதி, மின் வசதி ஆகியவை முழுவதும் சிறப்பாக இல்லாத ஒரு நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைத் திணிக்க யாரும் அரசை வற்புறுத்தவில்லை. பொய்கள் நிரம்பிய பாடப்புத்தகங்களை பள்ளி மாணவர்கள்மீது திணிக்க அரசை யாரும் வற்புறுத்தவில்லை. பழைய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றி அவற்றின் தாக்கங்களை புதுமையானது போல விளம்பரம் செய்ய யாரும் அரசை வற்புறுத்தவில்லை. இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார சீரழிவுகளில் ஒன்றான பணமதிப்பழிப்புக்குப் பிரதமர் மோடி மட்டுமே முழுக்க முழுக்க பொறுப்பாவார். பல தொழில்களை நசுக்கிக் கொண்டிருக்கும் ஜி.எஸ்.டியை அவசர அவசரமாகக் கோளாறுகளோடு அமல்படுத்த அவரே பொறுப்பாவார்.
தன்னை விமர்சித்தவர்களை வெற்றிகரமாக ஒடுக்கி ஓரம்கட்டிய அரசு தற்போது மக்கள்மீது குறை கூறத் தொடங்கிவிட்டது. மக்கள் தங்களுக்கான வேலைவாய்ப்புகளைத் தானே உருவாக்கிக் கொள்ளவில்லை என்று அரசு பழி சுமத்துகிறது. பலிகடாக்களை கண்டுபிடிக்க அரசு முயற்சிக்கிறது. யார்மீது பழி சுமத்தலாம் என்று அரசு தேடி அலைந்துகொண்டிருக்கிறது. ஆனால், பொருளாதாரத்தை, சமூக உறவுகளை, நிர்வாகத்தை, மதங்களை, திறமைகளை, வளர்ச்சியைக் கீழே தள்ளிவிட்டதற்காக அரசு அதன் மீதுதான் பழிகளைச் சுமத்திக் கொள்ள வேண்டும்.
திறன் குறைவான, அகங்காரம் அதிகம் கொண்ட நபர்களைக் கொண்டே இந்த அரசு உருவாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை நிலையாக உள்ளது.
சில ஊடகங்களும் கூட விவசாயிகள் போராட்டம் போன்ற முக்கியப் பிரச்னைகளை ஒளிபரப்பாமல் அரசுக்குக் கொத்தடிமைகளாக உழைக்கின்றன. கடினமாக உழைக்கும் மக்களுக்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை. மக்கள் தங்களின் மகள்கள் வேறு எங்காவது பாதுகாப்பாக வளர்ந்தால் நன்றாயிருக்கும் எனக் கருதுகின்றனர். பெரு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவான கள்ள முதலாளித்துவமும் நாட்டில் தலைதூக்கியுள்ளது. பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளை ஆதரிப்பவர்களும்கூட பொருளாதார சிக்கல்களை சந்திப்பதை மறுக்க முடியுமா? நுகர்வோரின் நம்பிக்கை சிதைந்துவிட்டது என்பதை மறுக்க முடியுமா? அரசின் வீண் விளம்பரங்களைக் கண்டு தொடக்கத்தில் வியப்பதும் பிறகு வெறுப்பதும் மக்களுக்குப் பழகிவிட்டதல்லவா?
அனைத்து மக்களையும் சில காலத்துக்கு மட்டும் ஏமாற்றி வைக்க முடியும். சில மக்களை எப்போதுமே ஏமாற்றி வைக்க முடியும். ஆனால், அனைத்து மக்களையும் எப்போதுமே ஏமாற்றி வைக்க முடியாது. இதற்கு முந்தைய அரசு ஓர் அற்பத்தனமான, தவறுகள் நிறைந்த, ஆத்திரமூட்டக்கூடிய ஓர் ஊழல்வாத அரசாகவே இருந்தது. இருப்பினும் நாடு நிலையான வளர்ச்சிப் பாதையில் இருந்தது.
ஆம், வானிலை மாறிக்கொண்டுதான் இருக்கிறது. யார்மீது பழி சுமத்துவது என்பதை நாமே கற்றுக்கொள்வோம்.
நன்றி: பிசினஸ் ஸ்டாண்டர்ட்
தமிழில்: அ.விக்னேஷ்
மக்களின் பொறுமையைச் சோதிக்கும் அரசின் போக்கு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:51:00
Rating:
No comments: