வட இலங்கையை ஸ்தம்பிக்கவைத்த தமிழ்க் கைதிகள் விவகாரம்!

இலங்கை
இலங்கையில் சிங்களர்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் நீண்டகாலமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, வடக்கு மாகாணம் முழுவதும் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. அனைத்து அன்றாடப் பணிகளும் நிறுத்தப்பட்டதால் வடமாகாணம் முழுக்க இயல்பு வாழ்க்கை முடங்கியது. 
வலுக்கும் போராட்டம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகள், தடுப்புமுகாம்களில் வைத்திருந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 132 பேரை தொடர்ச்சியாக சிறையிலேயே அடைத்துவைத்துள்ளனர். சாட்சியங்களுக்குப் பாதுகாப்பு எனக் காரணம்கூறி அவர்களின் வழக்குகளை சிங்களர் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களுக்கு இலங்கை அரசு மாற்றியுள்ளது. ஏற்கெனவே எந்தவித நியாயமுமின்றி சிறையில் அடைத்துவைக்கப்பட்டவர்களுக்கு இது பேரிடியாக வந்துவிழுந்தது. இதைக் கண்டித்து அனுராதபுரம் சிறையில் உள்ள மூன்று அரசியல் கைதிகள், 19 நாள்களாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஈழத்தமிழ் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். அண்மையில், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இலங்கை
இந்நிலையில், இலங்கையின் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இன்று ஈழத்தமிழர் தாயகமான வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்செய்கிறார். அதற்கு முன்பாக வெள்ளியன்று யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு அடங்கிய வடக்கு மாகாணம் முழுவதும் முழு அடைப்பு மற்றும் தொழில்நிறுத்தப் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு கடந்த 10-ம் தேதியன்று அறிவித்தது. 
19 அமைப்புகள் பங்கேற்பு
அதன்படி, யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வராசா கஜேந்திரன் உட்பட தமிழ் மக்கள் பேரவை, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, வடமாகாண புதிய அதிபர் சங்கம், யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், கிராமி உழைப்பாளர் சங்கம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், வலி வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு குழு, யாழ்ப்பாண பொருளியலாளர் சங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி, ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் சிவில் சமூக அமையம், தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை சைவ மகா சபை ஆகிய 19 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
இலங்கை
‘சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்கப் பணியாற்றவேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திடம் வலியுறுத்தாமல், மென்மைப்போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குற்றம்சாட்டினார்கள். இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக மட்டுமல்லாமல் தமிழ்க் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தம் கடமையை உணர்த்தவுமே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர்கள் கூறினர். 
இதற்கிடையில் வட மாகாண ஆளுநரைச் சந்திக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட்ட சிலர் சென்றபோது, ஆளுநர் ரெஜினால்ட் கூரே தகவலறிந்து பொதுநூலகத்துக்குச் சென்றுவிட்டதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட இலங்கையை ஸ்தம்பிக்கவைத்த தமிழ்க் கைதிகள் விவகாரம்! வட இலங்கையை ஸ்தம்பிக்கவைத்த தமிழ்க் கைதிகள் விவகாரம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:29:00 Rating: 5

No comments:

Powered by Blogger.