கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத பாஜக!

சிறப்புக் கட்டுரை: கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத பாஜக!

ப்ரியன்
‘ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து அப்புறம் மனுஷனையே கடிச்ச கதையாச்சு’ என்று கிராமங்களில் ஒரு சொல்வழக்கு உண்டு. பாஜகவின் செயல்பாடுகளும் இப்போது அப்படித்தான் இருக்கின்றன. 2014இல் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி உள்ளிட்ட பாஜகவினர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரண்டே வருடங்களில் கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்; கறுப்புப் பணத்தை ஒழிப்போம்; பொருளாதாரத்தைப் பன்மடங்கு உயர்த்துவோம்” என்றெல்லாம் வாக்குறுதி அளித்தனர்.
ஐ.மு. ஆட்சியில் பரந்த அளவில் ஊழல்கள் நடந்ததாகப் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், பாஜக மத துவேஷத்தைக் கிளப்பிவிடும் குணம் கொண்டது என்பதைக்கூட ஒதுக்கிவைத்துவிட்டு, மிக்க நம்பிக்கையுடன் மக்கள் பாஜகவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் அளவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினார்கள். ஆனால், இப்போது மூன்று வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டது மட்டுமல்லாமல் மக்களை மென்மேலும் துன்பத்திலும் வறுமையிலும் தள்ளிவிடும் வகையில் மோடியின் செயல்பாடுகள் அமைந்துவிட்டன.
குறிப்பாகப் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டியை அமல்படுத்திய விதமும் நமது பொருளாதாரத்தை மீட்க முடியாத அளவுக்குப் படுபாதாளத்தில் தள்ளியிருப்பதாக எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் பிரபல பொருளாதார நிபுணர்களிலிருந்து பாஜக தலைவர்கள் வரை பலரும் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கானவர்கள் வேலை இழந்திருக்கிறார்கள்; ஆயிரக்கணக்காண சிறுதொழில்கள் மூடப்பட்டுவிட்டன; கறுப்புப் பணம் ஒழிந்தபாடில்லை; உற்பத்தித்துறை நலிவடைந்திருக்கிறது; ஏற்றுமதி குறைந்துவிட்டது. இப்படி மோடி அரசின் முக்கியமான இரண்டு திட்டங்கள் நாட்டின் பொருளாதார முதுகெலும்பைச் சிதைத்துவிட்டதாகப் பரவலாக விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் மோடி தரப்பிலிருந்து சொல்லப்படும் ஒரே பதில்: “இப்போது நிலவும் சூழல் தற்காலிகமானதுதான்; விரைவில் நிலைமை சரியாகும்.”
விமர்சனங்கள் எதிர்கொள்ளப்படும் விதம்
பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டியின் பாதகமான விளைவுகள் குறித்தும் மற்றும் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்தும் ஊடகங்கள் விமர்சிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், திட்டங்களின் தாக்கத்தால் உருவாகியுள்ள வேதனைகளைக் களைவதற்குப் பதிலாக, விமர்சிக்கும் ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கும் பாசிச நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது பாஜக. தேசிய அளவில் கடந்த இரண்டு வருடங்களாகவே இதுபோன்ற அடக்குமுறைகளில் ஈடுபட்டிருந்த பாஜக இப்போது தமிழகத்திலும் மெர்சல் விவகாரத்தில் அதிகார ஆணவத்தைக் காட்டியதன் மூலம் தனது கைவரிசையின் எல்லையை விரிவுபடுத்தியிருக்கிறது.
ஜி.எஸ்.டியை விமர்சனம் செய்து மெர்சலில் வசனம் வந்துவிட்டதாம். ‘என்ன துணிச்சல்?’ என்று பொங்குகிறார் தமிழிசை. இதுபோன்று துணிச்சல் வருவதற்கு ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தாலே போதும் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். நான்கு பேர்கொண்ட நடுத்தரக் குடும்பம் ஓட்டலில் ஐந்நூறு ரூபாய்க்குச் சாப்பிட்ட பிறகு அதற்கு மேல் தொண்ணூறு ரூபாய் ஜி.எஸ்.டி. என்று தெரியும்போது குடும்பத் தலைவர் வேதனையில் புலம்பி மத்திய அரசை சபிப்பதைத் தமிழிசை பார்த்திருந்தால் ‘துணிச்சல்’ எங்கிருந்து வருகிறது என்பதை அவர் புரிந்துகொண்டிருப்பார்.
திரைப்படத்தில் எதிரொலிக்கும் குரல்
திரைப்படம் என்பது பல விஷயங்களை மிகைப்படுத்திக் காட்டும் ஒரு ஊடகம். காலம் காலமாகவே திரைப்படங்கள் சமூக மற்றும் அரசியல் அவலங்களைத் தோலுரித்துக் காட்டி வருகின்றன. அரசின் பொருளாதாரத் திட்டங்கள் மக்களை பாதிக்கும்போது அதன் பிரதிபலிப்பு மற்ற ஊடகங்களைப் போலத் திரைப்படங்களிலும் எதிரொலிப்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காகத் திரைப்பட இயக்குநரும் வசனம் எழுதுபவரும் குறிப்பிட்ட துறைகளில் வல்லுநராக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது; அது அவசியமுமில்லை.
மெர்சலில் சொல்லவருவது என்னவென்றால் ‘28 சதம் ஜி.எஸ்.டி. வரி வாங்கி வருவாயைக் குவிக்கும் அரசு, எல்லோருக்கும் இலவச மருத்துவம் கொடுக்கலாமே’ என்பதுதான். இந்த வசனத்தின் பின்னால் பொதிந்திருக்கும் பொருள்: ‘அதிக வருமானம் ஈட்டும் அரசு, ஜனாதிபதிக்குக் கிடைக்கும் மருத்துவ வசதியை சாமானியனுக்கும் செய்துதர வேண்டும்’ என்பதுதான். இது சமூக அக்கறையைப் பிரதிபலிக்கும் விஷயம். இதைப் புரிந்துகொள்ளாமல் ‘உண்மை நிலையை விளக்குகிறோம்’ என்று ஜி.எஸ்.டி. குறித்து பாஜகவினர் பாடம் எடுப்பதைப் பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.
ஆனால், இந்த நகைச்சுவைக் காட்சி சட்டென மிரட்டல் காட்சியாக மாறுகிறது. சென்சார் ஆன படத்திலிருந்து வசனங்களை எடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளருக்கு எச்சரிக்கை விடப்படுகிறது. தயாரிப்பாளர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து பம்முகிறார். கறுப்புப் பணம் புரளும் திரைப்படத்துறைக்கு வருமான வரித்துறையின் பாய்ச்சல் நன்றாகவே தெரியும். பாஜகவின் அரசியல் எதிரிகள்மீது தயவு தாட்சண்யம் இல்லாமல் பாயும் புலனாய்வு ஏஜென்ஸிகள், பரபரப்பு ஓய்ந்த பிறகு தங்கள் படக்குழுமீது பாயும் வாய்ப்பு இருப்பதைத் தயாரிப்பாளர் நன்கு அறிவார். எனவே ‘மனம் புண்பட்டிருந்தால் காட்சிகளை எடுத்து விடுகிறோம்’ என்று சறுக்குகிறார். அவருக்குத் திரைப்படத் துறையிலிருந்து மடடுமல்லாமல் எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்தும் பேராதரவு கிடைத்திருக்கிறது. எனவே, அவர் பாஜகவின் அழுத்தத்துக்கு பலியாகக் கூடாது என்பதே கருத்துச் சுதந்திரத்துக்காகக் குரல் கொடுப்பவர்களின் வேண்டுகோள்.
இந்தக் கட்டுரை எழுதப்படும் இந்த நிமிடம்வரை தயாரிப்பாளர் அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருக்கிறார். நாளை அவர் மிரட்டலுக்கு அடிபணிந்து வேறுவிதமாக முடிவெடுத்தாலும் அதன் பின்னணியை நாம் அனைவரும் சுலபமாகவே புரிந்துகொள்வோம்.
எது உண்மை நிலவரம்?
‘உண்மை நிலையைப் புரிந்துகொண்டு பேச வேண்டும்’ என்கிறது பாஜக. ஏதோ இவர்கள் உண்மை நிலையைப் பேசித்தான் ஆட்சியைப் பிடித்துபோலப் பேசுகிறார்கள். ஒரு சின்ன உதாரணம். அலைக்கற்றை விவகாரத்தில் சிஏஜி அறிக்கை அரசுக்கு இழப்பு ரூ.1,76,000 கோடி என்றது. பின்னர் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டைப் பதியும்போது அரசுக்கு இழப்பு 30,000 கோடி என்று சொன்னது. ஆனால், பாஜக தலைவர்கள் இன்னமும் 1,76,000 கோடி இழப்பு என்று பேசுகிறார்களே தவிர 30,000 கோடி என்றா பேசுகிறார்கள்?
இப்போதெல்லாம் பாஜகவினர், மோடியை ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்டவர்போலச் சித்திரிக்கிறார்கள். அவரது திட்டங்களை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பது போலவும் பேசி வருகிறார்கள். மோடி ஓர் அரசியல்வாதி; அவரும் தேர்தல்களில் பாஜகவுக்காகப் பிரசாரம் செய்பவர் என்ற நிலையில் மோடியும் அவரது செயல்பாடுகளும் விமர்சனத்துக்கு உட்பட்டவையே. ஜி.எஸ்.டியால் குஜராத்தில் லட்சக்கணக்கான வர்த்தகர்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டுதானே, வரும் தேர்தலில் ஓட்டுக்களை அள்ளுவதற்குத் திருத்தங்களைக் கொண்டுவருகிறார் மோடி? அரசியல் நோக்கத்தோடு இதைச் செய்யும் மோடி, விமர்சனத்தையும் சந்தித்ததாக வேண்டும்.
இப்போது இந்தக் கட்டுரையின் முதல் மூன்று வரிகளை மறுபடியும் படியுங்கள். கடந்த இரண்டு வருட காலத்தில் பாஜக அரசையும் மோடியையும் அவருக்கு மிகவும் வேண்டியவராக இருக்கும் தொழிலதிபர் அதானியையும் பற்றி வெளியிடப்படும் விமர்சனங்களை அடக்கும் முயற்சியில் அதிகாரத்தில் இருப்பவர்கள் ஈடுபட்டிருந்தார்கள் என்பதற்குப் பல உதாரணங்கள் உண்டு. அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி; வலைதள ஊடகமாக இருந்தாலும் சரி; தொலைக்காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி; தங்களுக்குப் பாதகமான செய்திகளும் விமர்சனங்களும் வரும்போது அவற்றை அதிகாரத் தொனியுடன் அடக்கியுள்ளனர். இப்போது திரைப்படங்களிலும் சர்வாதிகார மனப்பான்மையைக் கட்டவிழ்த்துவிட்டுக் கருத்துச் சுதந்திரத்தின் மீது கை வைக்கிறார்கள்.
அடக்குமுறைக்கான உதாரணங்கள்
* சமீபத்தில் அமித் ஷாவின் மகன் ஜெய் அமித் ஷா நடத்திய டெம்பிள் என்டர்பிரைஸ் என்ற நிறுவனம் பாஜக ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் வர்த்தகத்தைப் பல்லாயிரக்கணக்கில் எப்படிப் பெருக்கிக்கொண்டது என்பது பற்றி அம்பலப்படுத்தியது வயர் இணைய இதழ். ஆனால், பிரபல தேசியக் காட்சி ஊடகங்கள் அமித் ஷாவுக்காக வரிந்து கட்டிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் பேட்டியை ஒளிபரப்பினவே தவிர, வயரின் செய்தியை ஒளிபரப்பாமல் அமைதி காத்தன. என்டிடிவி மட்டுமே மிரட்டலுக்கு அடிபணியாமல் வயர் செய்தியை ஒளிபரப்பியது. இப்போது வயர் தரப்பைக்கூட விசாரிக்காமல் இதுகுறித்த செய்திகளுக்குத் தடை போட்டிருக்கிறது அகமதாபாத்தில் உள்ள கீழமை நீதிமன்றம்.
* எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி என்ற பத்திரிகையின் வலைதளத்தில் மத்திய அரசிடமிருந்து விதிகளுக்குப் புறம்பாக அதானி 500 கோடி ரூபாய் refund ஆகப் பெற்றார் என்ற கட்டுரை வந்திருந்தது. ஆனால், அழுத்தத்தின் காரணமாக அந்தக் கட்டுரை உடனே வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
* என்டிடிவியில் ஒரு விவாதத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ரா தவறாகப் பேசியபோது, நெறியாளர் நிதி ரஸ்தான் அவரை மன்னிப்பு கேட்கச் சொன்னார்; இல்லையென்றால் வெளியேறச் சொன்னார். இதற்காகக் கொதித்தெழுந்து தொலைக்காட்சி நிறுவனத்தை சிபிஐ சோதனைக்குட்படுத்தினார்கள். இத்தனைக்கும் அந்த நிறுவனம் கடன் வாங்கியிருந்த ஐசிஐசிஐ வங்கி தனியார் வங்கி. அதில் அரசின் பங்கு மிக மிகக் குறைவு.
* ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் வெட்டும் அதானிக்கு அந்த அரசு 1000 கோடி ரூபாய் கடன்தர இருக்கிறது. இந்தச் சூழலில் அதானி நிறுவனத்தைப் பற்றிய குறும்படம் எடுத்த ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி நிறுவனம் காவல்துறை மூலம் மிரட்டப்பட்டது.
* பிரபல ஆங்கிலப் பத்திரிகையான இந்துஸ்தான் டைம்ஸ் இந்துத்வா படைகளால் ஏற்படும் வன்முறைகளைத் தினசரி பட்டியலிட்டு வந்தது. இதன் காரணமாக மத்திய அதிகாரப் பெருந்தலையின் கோபத்துக்கு ஆளான ஆசிரியர் பாபி கோஷ், வேலையை ராஜினாமா செய்யும் நிலை வந்தது.
* சீன விவகாரத்தை மோடி சரியாகக் கையாளவில்லை என்று வலைதளத்தில் கட்டுரையைப் போட்ட இந்துஸ்தான் டைம்ஸ் அழுத்தம் காரணமாக உடனே எடுத்துவிட்டது.
* ஆர்.எஸ்எஸ். அமைப்பின் துணை நிறுவனம் ஒன்று அசாமிலிருந்து 31 மலைவாழ் பெண்களை வெளிமாநிலங்களுக்குக் கடத்திவிட்டதாக அவுட்லுக் பத்திரிகை எழுதியது. அதிகாரம் கொடுத்த அழுத்தம் காரணமாக அதன் ஆசிரியர் பதவியிலிருந்து தூக்கப்பட்டார்.
* மிர்ச்சி பண்பலை மோடியைக் கிண்டல் செய்தது என்பதற்காக அந்தக் குழுமத்தைச் சேர்ந்த எகனாமிக் டைம்ஸ் நிகழ்ச்சியைப் புறக்கணித்தார் மோடி. இதுவும் ஒருவகை அழுத்தம்தானே.
* ராஜஸ்தானில் பயிர் காப்பீடு திட்டம் சரியாகச் செயல்படவில்லை என்று எழுதப்பட்ட கட்டுரையை மறுநாளே வலைதளத்திலிருந்து எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது டைம்ஸ் ஆப் இந்தியா.
* பாஜக பாராளுமன்ற உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் பாதுகாப்புத்துறையுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கிறார். எனவே, அவர் பாதுகாப்புத்துறை நிலைக் குழுவில் இடம்பெறக் கூடாது என்று வயர் இணைய இதழ் எழுதியது. அதற்காக மிரட்டல் விடப்பட்டது.
* எஸ்ஸார், எஸ்ஸெல் ஆகிய நிறுவனங்கள் மத்திய ஆட்சியாளர்களுக்கு வேண்டியவை. இவைகளைப் பற்றி எழுதிய கேரவன் மற்றும் வயர் வலைதளங்களுக்கு மிரட்டல்.
* மெர்சல் பட சர்ச்சையில் தயாரிப்பாளர் - விஜய் தரப்புக்கு உறுதியான ஆதரவைத் தெரிவித்து, வலைதளத்தில் படம் பார்த்த ஹெச்.ராஜாவைக் கடுமையாக கண்டித்த நடிகர் விஷால் அலுவலகத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் வந்து ‘ஆழம்’ பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இது எதிர்பார்த்ததுதான். எதிர்ப்புக் குரல்களை அடக்கப் புலனாய்வு ஏஜென்ஸிகளைப் பயன்படுத்துவது பாஜகவுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதுவும் மற்றொரு வகையான அழுத்தம்தான். ஆனால் ‘எதையும் சமாளிக்கத் தயார்’ என்று விஷால் சொல்லியிருக்கிறார். இதுகுறித்து ஹெச்.ராஜா, ‘உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். உண்மைதான். ஒரே வருடத்தில் கோடிக்கணக்கில் வருமானத்தை பெருக்கிக்கொண்ட அமித் ஷா மகன் ஜே ஷா எப்போது ‘தண்ணீர்’ குடிக்கப் போகிறார் என்பதை நாடு எதிர்பார்க்கிறது.
இவைகளெல்லாம் வெளியே வந்த விவகாரங்கள். நான்கு சுவர்களுக்குள்ளேயே முடங்கிப்போன மிரட்டல்களும் அழுத்தங்களும் நிறைய. “மோடி பிரதமராக வந்ததிலிருந்து பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டிருக்கிறது’ என்று சொன்னது நியூயார்க் டைம்ஸ். உலக அளவில் பத்திரிகைச் சுதந்திரத்தின் நிலை குறித்த படடியலில் (World press freedom index) இந்தியா 136ஆவது இடத்தில் இருக்கிறது. நமக்கு மேலே உகண்டா போன்ற சிறிய நாடுகள் இருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
விமர்சனம் செய்வதைக் குறைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் பாஜகவைப் பற்றிய பாதகமான செய்திகளைப் போடுவதையே குறைத்துக்கொண்டு விட்டன பெரும்பான்மையான ஊடகங்கள். ஏனென்றால் அதுபோன்ற செய்திகளை வெளியிடும்போது கோடிக்கணக்கான வருவாயைக் கொடுக்கும் அரசு விளம்பரங்களை இழப்பது மட்டுமல்லாமல் அரசின் தொடர்பும் அறுபட்டுப்போகிறது. எனவே, சுய தணிக்கையில் அரசின் மீதான விமர்சனங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. எதிர்க்கட்சிகளைப் பற்றி தாராளமாக அலசப்படுகிறது.
இதைவிட மோசமான விஷயம் என்னவென்றால், விமர்சனம் செய்பவர்கள் தேசத் துரோகிகளாகச் சித்திரிக்கப்படுவதுதான். அதைவிடக் கொடுமையாக, விமர்சனம் செய்பவர்களின ஜாதகங்களை ஆராய்ந்து மத துவேஷத்தைக் கிளப்பிவிடுவது (இப்போது விஜய் விவகாரத்தில் நடந்தது போல).
இந்தச் சூழலில் ஒரளவு ஆறுதலாக இருப்பவை வயர் போன்ற வலைதளங்களும் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருவரையும் கருத்தாளர்களாக மாற்றியிருக்கும் சமூக வலைதளங்களும்தான்.
சுதந்திரக் காற்றை இங்குதான் நாம் சுவாசிக்கிறோம். அதற்கும் தடைபோட பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
‘அவசர நிலையின்போது மீடியாக்களைக் கும்பிடத்தான் சொன்னார்கள். ஆனால், பெரும்பான்மையான ஊடகங்கள் தரையிலேயே விழுந்து வணங்கின’ என்று ஒருமுறை சொன்னார் லால் கிருஷ்ண அத்வானி. இன்றும் கிட்டத்தட்ட அதே நிலைதான் இருக்கிறது.
ஆனால், அடக்குமுறைகளும் அதிகார மிரட்டல்களும் மீடியாக்களின் குரல்களுக்கு நிரந்தரமாகத் தடை போட்டுவிட முடியாது. ஒருகட்டத்தில் அது திமிறி எழும்போது, அடக்கி ஆண்டவர்கள் காணாமல் போவார்கள். இதை இந்தியா அவசர நிலைக் காலத்திலேயே கண்டிருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத பாஜக! கருத்துச் சுதந்திரத்தை மதிக்காத பாஜக! Reviewed by நமதூர் செய்திகள் on 00:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.