CIA-COMRADE IN AMERICA திரை விமர்சனம்-நெல்லை ஆதில்
அமல் நீரத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் தான் COMRADE IN AMERICA படத்தின் பெயரைப்போலவே படம் ஒரு கம்யூனிச காம்ரேட் பற்றியது தான்.படத்தின் விமர்சனத்திற்குள் செல்லும் முன் சினிமாவை அரசியல் பிரச்சாரத்திற்காகவோ அல்லது கொள்கை பிரச்சாரத்திற்காகவோ பயன்படுத்துவதில் மலையாள இயக்குனர்கள் கெட்டிக்காரர்கள்.
இயல்பாகவே கேரள மண் கம்யூனிசத்தை பெருமளவு தன்னகத்தே உள்வாங்கிக்கொண்டதால் இதைப்போன்ற படங்கள் கேரளத்தில் வருவதில் ஆச்சரியமில்லை தான்.இதற்கு முன் சித்தார்த் சிவா பிரபல நடிகர் நிவின் பாலியை வைத்து “சகாவு” என்ற படத்தை இயக்கியிருந்தார் அது மிகப்பெரும் வெற்றியை தந்தது.அந்த வகையில் தான் CIAஉம் ஒரு நல்ல வெற்றியை கொடுத்திருக்கிறது.
கலையை குறிப்பாக சினிமாவை சித்தாந்த ரீதியாக,கொள்கை ரீதியாக வடிவமைத்ததில் ஆரம்பகாலத்தில் தமிழ்த்திரையுலகினருக்கு தான் பெரும் பங்கு உண்டு என்பதை மறுக்கவியலாது. M.R ராதா,MGR,கலைஞர் என அனைவரும் திராவிட சித்தாந்தத்தை சினிமாக்களில் வடித்து அதன் மூலம் வலிமையானதொரு கொள்கை பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தனர்.அதன் வெளிப்பாடு தான் 50 ஆண்டு கால திராவிட அரசியல்.ஆனால் இன்று தமிழ் சினிமா வெறும் வியாபாரமாக மாறிவிட்டது.அதைக்கூட இங்கிருக்கும் இயக்குனர்கள் முழுமையாக செய்வது இல்லை.
ராம்,மிஷ்கீன்,ராஜு முருகன்,ஜனார்த்தனன் போன்ற ஒரு சில கொள்கை பேசக்கூடிய இயக்குனர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்களால் மக்களை பெருமளவு ஈர்க்க முடியவில்லை.சினிமாவுக்காக மக்களா,மக்களுக்காக சினிமாவா என்று பார்த்தால் சினிமாவுக்காகத்தான் மக்கள் என்பது தமிழ் சினிமா பார்க்கும் சிறு குழந்தை கூட சொல்லிவிடும்.ஆனால் உண்மையில் சினிமா என்பது மக்களுக்காகத்தான் இருக்க வேண்டும் அப்போது தான் அதில் அறம் இருக்கும்,கலை இருக்கும்,மனிதம் இருக்கும்.சினிமாவுக்காக மக்கள் எனில் அதில் வெறும் வியாபாரம் தான் இருக்கும்.தான் நினைத்ததை எல்லாம் கதையாக்கி அதனை மக்கள் மீது திணித்து ஒரு கலாச்சார சீர்கேடை ஏற்படுத்தும்.இப்படி தமிழ் சினிமா இன்று தன்னை முழுதும் வியாபார தளமாக்கியதற்கு மத்தியிலும் சில திரைப்படங்கள் விழுமங்களை பேசுகின்றது என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.
சரி இனி CIAவுக்கு வருவோம்.இந்த படத்தின் கதை ஏற்கனவே நாம் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பது தான் ஆனால் இதில் சில இடங்களில் இயக்குனர் செய்திருக்கும் நுண் அரசியல் தான் படத்தின் வெற்றிக்கு காரணமென்று நினைக்கிறேன்.படத்தின் ஆரம்பமே இன்குலாப் ஜிந்தாபாத்தில் இருந்து தான் ஆரம்பமாகிறது.ஆளும் காங்கிரஸை எதிர்த்து கம்யூனிஸ்டுகளின் போராட்டம்.படத்தின் கதா நாயகன் துல்கர் சல்மான் ஒரு காம்ரேட் அதுவும் அனைத்து பிரச்சனைகளுக்கும் களத்தில் இறங்கி போராடும் வீரியமான கம்யூனிஸ்ட்.ஆனால் அவரது அப்பாவோ தீவிர காங்கிரஸ்காரர் பொறுப்பில் வேறு இருக்கிறார்.இப்படியான ஒரு கதைகளம் என்றாலே அப்பாவும்,மகனும் எலியும் பூனையுமாகத்தான் தமிழ்சினிமாவில் பெரும்பாலும் காட்டுவார்கள் ஆனால் இந்த படத்தில் நேர் மாற்றம்.கம்யூனிஸ்டான துல்கரும்,காங்கிரஸ்காரரான அவனது அப்பாவும் மிகவும் நெருக்கமான தந்தை மகன் உறவைப்பேணுவதாக காட்டியிருக்கிறார் இயக்குனர்.இங்கே விருப்பங்களுக்கு தடையில்லை என்று துல்கரின் அப்பாவாக நடித்திருக்கும் சித்தீக் பேசும் போது பக்குவமானதொரு கருத்தை இயக்குனர் பதிய வைத்திருக்கிறார்.
இப்படியாக பல்வேரு பிரச்சனைகள்,காவல்துறை கெடுபிடிகள் மத்தியில் வாழ்க்கை கடந்துகொண்டிருக்கும் பொது.கல்லூரியில் அன்று நடக்கும் சம்பவம் தான் படத்தின் கதைக்களம் என்று கூட சொல்லலாம்.கல்லூரியில் ஜூனியர்களை சீனியர்கள் ரேக்கிங்க் செய்கின்றனர் அப்போது அங்கு துல்கரின் என்ட்ரி (என்ன இருந்தாலும் பிரேமம் படத்தில் நிவின் என்ட்ரி அளவு இல்லை) துல்கரை கண்டதும் மற்ற மாணவர்கள் ரேக்கிங்க் செய்வதை நிறுத்துகின்றனர் அவர்களை கண்டித்து அனுப்புகிறான் கதா நாயகன்.உடனே அந்த பெண்ணிற்கு,எந்த பெண்ணிற்கு என்ற கேள்வி உங்களுக்கு எழுமே இந்த இடத்தில் அந்த பெண்ணை பற்றி சொல்லனுமல்லவா அவர் தான் கதையின் கதாநாயகி கார்த்திகா,இவரையும் சேர்த்து தான் அவர்கள் ரேக்கிங்க் செய்தது அப்போது தான் துல்கர் வந்து காப்பாற்றுகிறார்.உடனே அவருக்கு துல்கரின் மாஸ்,சார்மிங் எல்லாவற்றையும் நினைத்து காதல் தொற்றிக்கொள்கிறது,துல்கருக்கும் தான்.அப்படியே சில காலங்கள் ஓடுகிறது.
கல்லூரி மாணவர்கள் சிலரை பேருந்துக்குள் ஏற்றுவது குறித்த பிரச்சனை ஒன்றை ஜூனியர்கள் துல்கரிடம் வந்து முறையிட துல்கர் அந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை புரட்டி எடுக்கிறார் உப்பு சப்பே இல்லாத ஒரு சண்டை காட்சி என்று சொல்லலாம்.பிறகு தான் தெரிய வருகிறது அந்த பஸ் கம்பெனி முதலாளி தன் காதலி கார்த்திகாவின் உறவினர் என்று,கார்த்திகாவின் பெற்றோர் அமேரிக்காவில் இருப்பதால் கார்த்திகாவும் அவரது வீட்டில் தான் தங்கி படிக்கிறாள் .துல்கர் மீது FIR போடப்பட்டு லாக்கப்பில் வைக்கப்படுகிறார்.அந்த கேப்பில் கார்த்திகா-துல்கரின் காதலும் தெரியவந்து அவ்வளவு தான் சங்கதி அடுத்து என்ன நடந்திருக்கும் என்பதை நான் சொல்ல தேவையில்லை அவர் அமேரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.உடனே அமேரிக்கா சென்று காதலியை கூட்டி வருவது தான் மீதி கதை என்று நினைப்பீர்கள்,ஆம் கதையும் ஓரளவு அப்படித்தான் இருக்கிறது.
துல்கர் அமேரிக்கா சென்று காதலியை பார்க்கப்போவது என்னமோ உண்மை தான் ஆனால் அது கம்யூனிச பயணமாக மாறுவது தான் படத்தின் மொத்த கதை.அமேரிக்கா செல்ல முடிவெடுத்த போது கம்யூனிஸ காரியாலயத்தில் இருந்து தனது ஆசான்களான காரல் மார்க்ஸ்,லெனின்,சேகுவேரா ஆகியோரிடத்தில் துல்கர் காரனம் சொல்வது போன்ற காட்சிகள் அருமையாக இருந்தது.அப்போது பயணம் என்பது கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளில் ஒன்று என்றும் சேகுவேராவின் பயணத்தை குறித்தும் சில வசனங்களை துல்கர் பேசுவது கம்யூனிச கொள்கையை எளிமையாக கொண்டு மக்களிடம் சேர்த்திருப்பதை காட்டுகிறது.அமேரிக்கா செல்ல விசா கிடைக்காமல் கூறுக்கு வழியில் மெக்ஸிகோ வழியாக அங்கிருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகம் மூலம் ஒரு இலங்கை தமிழரின் உதவியோடு பயணிக்கும் இடர்பாடுகள் நிறைந்த பயணம் தான் மீதி கதை.
இலங்கை தமிழராக ஜான்விஜய் நடித்திருக்கிறார்.அவரை இலங்கை தமிழர் என்று அறிமுகப்படுத்தியதோடு விடுதலைப்புலி என்றும் துல்கர் கேட்டதற்கு தயங்காமல் பதிலளிக்கிறார்.துல்கரும்,ஜான் விஜயும் அமேரிக்கா சென்றார்களா,உண்மையில் அமேரிக்கா பாதுகாப்பான நாடுதானா?இன்னும் யாரெல்லாம் அவரோடு பயணித்தார்கள்,தனது காதலியை துல்கர் சந்தித்தாரா என்பது தான் படத்தின் மீதி கதை.இந்த படம் காரல் மார்க்ஸின் பிறந்த நாளில் வெளிவந்ததோடு மட்டுமல்லாமல் மார்க்ஸிற்காக இந்த படத்தை சமர்பிப்பதாக இயக்குனர் அமல் நீரட் தெரிவித்தார்
கோபி சுந்தர் கவர்ச்சிகரமான இசை அமைத்திருக்கிறார்.லென்ஸ் மேன் ரீனுவும் தனது பணியை கச்சிதமாக செய்திருக்கிறார்,குறிப்பாக குழு அனைத்துமே தனது பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர்.மினிமம் பட்ஜட்டில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 35.86 கோடி வசூலை எட்டியது குறிப்பிடத்தக்கது
-நெல்லை ஆதில்
CIA-COMRADE IN AMERICA திரை விமர்சனம்-நெல்லை ஆதில்
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:54:00
Rating:
No comments: