ஜெ. கைரேகை வழக்கு: திணறும் தேர்தல் ஆணையம்!

ஜெ. கைரேகை வழக்கு: திணறும் தேர்தல் ஆணையம்!

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுக சாமி கமிஷன் இன்னும் தனது பணியை துவக்காத நிலையில்... சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஒரு தேர்தல் வழக்கின் மூலம் ஜெயலலிதாவின் அப்பல்லோ நாட்கள் பற்றிய மர்மம் மெல்ல மெல்ல உடைந்து வருகிறது.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடைபெற்ற, திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே. போஸின் வேட்பு மனுவோடு இணைக்கப்பட்ட ஏ, பி படிவங்களில் பொதுச் செயலாளர் என்ற வகையில் ஜெ.வின் கைரேகை இடம்பெற்றிருந்தது. இந்த கை ரேகை ஜெவிடம் இருந்து முறையாக பெறப்படவில்லை என்றும் அதனால் வேட்பு மனுவே செல்லாது என்றும் அத்தொகுதியில் திமுக வேட்பாளராக இருந்து வெற்றிவாய்ப்பை இழந்த டாக்டர் சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இந்த வழக்கின் அடுத்தடுத்த போக்குகள் வெறும் தேர்தல் வழக்காக மட்டுமல்ல...ஜெ.வின் கைரேகை மர்மத்தையும் உடைக்கும் வழக்காக அமைந்திருக்கின்றன.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் வில்பிரட் என்பவர், ஆஜராகி குறுக்கு விசாரணைக்கு பதிலளிக்க இருப்பதாக நேற்று மதியம் 1 மணி மின்னம்பலம் பதிப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படியே இவ்வழக்கில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் நேற்று (அக்டோபர் 13) பிற்பகல் ஆஜரானார்.
மதியம் 2.15-க்கு ஆரம்பித்த கோர்ட்டில் 4.15 வரை நடந்த இந்த குறுக்கு விசாரணையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் வில்ஃபிரட் -இடம் திமுக வேட்பாளர் தரப்பு வழக்கறிஞர் தொடுத்த கேள்விகளையும் பதில்களையும் இதோ காணலாம்.
*மதுசூதனன் கட்சியின் அவைத் தலைவர் என்றாலும் ஜெயலலிதாவுக்காக அவர் தேர்தல் கமிஷனுக்கு கடிதமெழுத அதிகாரம் படைத்தவரா? அதற்கான அத்தாட்சியை அவர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியிருந்தாரா?
மதுசூதனன் அதற்கான அங்கீகாரம் பெற்றவரா என்பதற்கான அத்தாட்சிகள் எதுவும் இணைக்கப்படவில்லை. அவர் சொன்னதை நம்பினோம், அவ்வளவுதான்.
*‘என்னால் கையெழுத்திட இயலவில்லை. கை ரேகை வைத்துக் கொள்கிறேன்’ என்று ஜெயலலிதாவே தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கலாம் அல்லவா?
அந்த மாதிரி எல்லாம் எதுவும் நடக்கவில்லை.
*தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகள் பொதுவாக அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் உரியவை. இந்நிலையில் கைரேகை வைத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு ஜெயலலிதா என்ற தனிப்பட்ட ஒருவருக்காக மட்டுமே போடப்பட்ட உத்தரவுதானே?
ஆமாம்... இது ஜெயலலிதா என்ற தனி நபர் ஒருவருக்காக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுதான்.
*ஜெயலலிதால் உடல் நிலை சரியில்லை என்று எழுதப்பட்ட கடிதத்தில் அவரது மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்பட்டிருந்ததா?
இல்லை. நாங்கள் அவர் உடல் நலமில்லை என்று நம்பினோம் அவ்வளவுதான்.
*வேட்புமனுவில் ஒருவர் கை ரேகை வைக்கிறார் என்றால் அதுபற்றி அட்டெஸ்ட் செய்வதற்கு அதாவது சான்றாவணம் செய்வதற்கு தேர்தல் நடத்தும் அதிகாரி, தலைமைத் தேர்தல் அதிகாரிகளில் ஒருவர், அல்லது இந்திய ஆட்சிப் பணியில் இருக்கக் கூடிய குறைந்த பட்சம் ஆர்.டி.ஓ. ஆகியோரில் ஒருவரே தகுதி ஆவார் என்று தேர்தல் சட்டம் சொல்வது தங்களுக்குத் தெரியுமா?
ஆம்... தெரியும்.
*அப்படியென்றால், ஜெ. கை ரேகை வைத்த வேட்புமனுவை ஒரு அரசு மருத்துவ அதிகாரி அட்டெஸ்டேஷன் செய்திருக்கிறாரே... அவர் அட்டெஸ்ட் செய்ய தகுதியான நபர் இல்லைதானே?
ஆமாம்.
*ஜெயலலிதாவிடம் கைரேகை பெறுவதற்கு அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவராலேயே முடியும். ஆனால் இதுபற்றி அரசு மருத்துவர்தான் அத்தாட்சி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உங்களிடம் அனுமதி கேட்கப்பட்டதா? அல்லது நீங்கள் கொடுத்தீர்களா? அப்படிக் கொடுத்தால் அது ஒரு தரப்புக்கு சாதகமானதுதானே?
தேர்தல் ஆணையம் ஒரு சார்பான நிலையில் இந்த அனுமதியை அளிக்கவில்லை.
*வேட்பு மனுவின் படிவங்களில் ஜெயலலிதாவை அடுத்த அதிகாரமிக்க கட்சியின் பொறுப்பாளர் கையெழுத்திடலாம் என்று என்று கட்சி முடிவெடுக்க வாய்ப்பு இருந்தது அல்லவா?
ஆம். இருந்தது. அப்படி அவர்கள் முடிவெடுத்து மனு கொடுத்திருந்தால் ஏற்றுக் கொண்டிருந்திருப்போம். ஆனால் அதுபற்றி ஆணையம் கமெண்ட் செய்ய இயலாது.
*தேர்தல் ஆணையம் என்பது ஒரு தீர்ப்பாயம் போன்ற அமைப்பு. முக்கிய முடிவுகளின்போது மூன்று தேர்தல் ஆணையர்களும் சேர்ந்து விவாதித்து முடிவெடுப்பார்கள். ஆனால் ஜெயலலிதாவுக்கு கைரேகை வைக்க அனுமதி அளிக்கும் முடிவு தொடர்பாக எவ்வித கூட்டமும் நடத்தப்படவில்லை என்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அப்படியெனில் இது ஜெயலலிதாவுக்காக தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட முடிவுதானா?
இந்த விஷயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் கூட்டம் நடத்தப்படவில்லை என்பது உண்மைதான்.
*அப்படியெனில் ஜெயலலிதாவுக்கு சாதகமான முறையில் தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது என்பது உண்மைதானா?
நாங்கள் யாருக்கும் சாதகமாக இல்லை. தேர்தல் சட்டத்தில் இருப்பதைதான் செயல்படுத்தியுள்ளோம்.
*தேர்தல் தொடர்பாக மனுதாரரின் (டாக்டர் சரவணன்) தரப்பினர் அளித்த புகார்களை எல்லாம் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம் ஜெயலலிதா தரப்பினரின் மனுமீது விரைந்து முடிவெடுக்கிறது என்றால் அது ஒருசார்புத் தன்மைதானே?
இல்லை. ஆணையம் யாருக்கும் சார்பாக செயல்படவில்லை.
*ஜெ. கை ரேகை வைத்த வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ளுமாறு நீங்கள் நேரடியாக ரிட்டனிங் ஆபீசர் (ஆர்.ஓ.) எனப்படும் தேர்தல் அலுவலருக்குத்தான் கடிதம் அனுப்பலாம். ஆனால் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்புகிறீர்கள். ஆனால் தலைமைத் தேர்தல் அதிகாரி அதை நேரடியாக ஆர்.ஓ.வுக்கு அனுப்பாமல் மூன்று மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தகவல் சொல்லி, அவர்கள் மூலம் ஆர்.ஓ. அறிவுறுத்தப்படுகிறார். அப்படியென்றால் முழு தேர்தல் ஆணையமும் ஆர்.ஓ. மீது செல்வாக்கு செலுத்தி அழுத்தம் கொடுத்து அந்த மனுவை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது என்று கருதலாமா?
தகவல் அப்படித்தான் அனுப்பப்பட்டது. ஆனால் இதில் ஆர்.ஓ.வுக்கு அழுத்தம் ஏதும் கொடுக்கப்படவில்லை.
-இவ்வாறு சுமார் இரண்டு மணி நேரம் தலைமை தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் வில்ஃபிரட்டிடம் திமுக வேட்பாளர் சரவணன் தரப்பு வழக்கறிஞர் மிகத் திறமையாக குறுக்கு விசாரணை செய்தார்.
முடிவில், ‘ஜெயலலிதா கை ரேகை வைத்த வேட்பு மனுக்களுக்கு சான்றாவணம் அளிக்க தேர்தல் சட்டப்படி, அரசு மருத்துவர் தகுதியான நபர் கிடையாது. எனவே அந்த மனுவே செல்லத் தக்கதல்ல. அதற்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்தின் கடிதமும் செல்லத் தக்கதல்ல’ என்று தங்கள் தரப்பு வாதத்தை நீதிமன்றத்திடம் முன் வைத்தது திமுக வேட்பாளர் தரப்பு.
திமுக வேட்பாளர் தரப்பின் இரண்டுமணி நேர குறுக்கு விசாரணைக்குப் பிறகு... எதிர்மனுதாரரான அதிமுக வேட்பாளர் போஸின் வழக்கறிஞர் சுமார் பதினைந்து நிமிடங்கள் வில்ஃபிரட் இடம் குறுக்கு விசாரணை செய்தார்.
அதன் பின், ’இந்த வழக்கின் அடுத்த கட்ட குறுக்கு விசாரணைக்காக , ஜெயலலிதாவின் கைரேகை இட்ட மனுவை அட்டெஸ்ட் செய்த டாக்டர் பாலாஜியை அழைப்பதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்’ என்று திமுக வேட்பாளர் தரப்பு நீதிபதியிடம் கோரிக்கை வைத்தது.
இதை அதிமுக வேட்பாளர் போஸ் தரப்பு கடுமையாக எதிர்த்தது. ஆனாலும் நீதிபதி திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்று டாக்டர் பாலாஜியை குறுக்கு விசாரணைக்காக வரும் 27 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
ஜெயலலிதாவை பார்த்தோம் என்றும் பார்க்கவில்லை என்றும் அமைச்சர்கள் முன்னுக்குப் பின் முரணாய் சொல்லிக் கொண்டிருக்கையில்...ஜெயலலிதாவை அப்போதைய நிலையில் சந்தித்தவர் என்று எழுத்துபூர்வமாக நிறுவப்பட்டவர் டாக்டர் பாலாஜிதான். அன்று சாதாரண டாக்டராக இருந்த பாலாஜி, அதன் பின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் என்ற பெரும் பொறுப்பு வாய்ந்த பதவிக்குச் சென்றார். இவரது உதவி இல்லாமல் அண்மையில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் பேசப்பட்டது.
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த டாக்டர் பாலாஜி... வரும் 27 ஆம் தேதி நீதிமன்றத்தால் குறுக்கு விசாரணை செய்யப்பட இருக்கிறார். எனவே இது தேர்தல் வழக்கு என்பதைத் தாண்டி ஜெயலலிதாவின் அப்பல்லோ நாட்களின் மர்மத்தை உடைக்கும் வழக்காகவே கருதப்படுகிறது.
27 ஆம் தேதி இன்னும் சூடு பறக்கும் இந்த வழக்கில்!
ஜெ. கைரேகை வழக்கு: திணறும் தேர்தல் ஆணையம்! ஜெ. கைரேகை வழக்கு: திணறும் தேர்தல் ஆணையம்! Reviewed by நமதூர் செய்திகள் on 04:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.