சிறப்புக் கட்டுரை: குடிசைத் தொழிலாளர் நிலை மேம்படுமா?
ஃபிரோசா மெஹ்ரோத்ரா
சட்ட திட்டங்களும், கொள்கைகளும் அவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கங்களை அடைய முடியாமல் போகலாம். ஆனால், அரசின் நோக்கங்களை முன்வைப்பதற்கும், தேவையான கட்டமைப்பை வழங்கவும் அரசின் கொள்கைகள் மிக அவசியமாகிறது. சுகாதாரம் முதல் மின்சக்தி வரை அனைத்துத் துறைகளுக்கும் இன்றளவில் கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. பெண்கள் முதல் நடைபாதை வியாபாரிகள் வரை குறிப்பிட்ட குழுவினருக்கும் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய மாதிரி சர்வே அலுவலகம் 2011-12ஆம் ஆண்டில் நடத்திய சர்வேயில் இந்தியா முழுவதும் சுமார் 37.4 மில்லியன் வீட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். வீட்டுத் தொழில் அல்லது குடிசைத் தொழிலாளர்களுக்காக ஏன் இதுவரை கொள்கை உருவாக்கப்படவில்லை என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது.
வீட்டுத் தொழிலாளர்கள் என்பவர்கள் யார்? வீட்டுத் தொழில் அல்லது குடிசைத் தொழில் முறைசாரா, அமைப்புசாரா துறையாகும். இந்தியாவின் மொத்த தொழிலாளர் சக்தியில் வீட்டுத் தொழிலாளர்களின் பங்கு 93 சதவிகிதம் ஆகும். சந்தையில் பல்வேறு பொருள்கள் மற்றும் சேவைகளை நேரடியாக வழங்கி ஊதியம் பெறுவதே இத்தொழிலாளர்களின் பணியாகும். வீட்டிலிருந்தோ, அலுவலகத்தில் இருந்தோ அல்லது சிறிய ஆலைகளில் இருந்தோ இவர்கள் தொழில் புரிவது வழக்கம்.
வீட்டுத் தொழிலாளர்களையே இரு பிரிவினராகப் பிரிக்கலாம். தையல் தொழில் போன்ற சுய தொழிலாளர்கள் ஒரு பிரிவினராக உள்ளனர். மற்றவர்கள் பெரும்பாலும் ஒப்பந்த ரீதியிலான வேலைகளையே செய்கின்றனர். வியாபாரிகள், இடைத்தரகர்கள் ஆகியோரிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றுக் கொள்கின்றனர். பீடி சுருட்டும் தொழில், எம்ப்ராய்டரி, ஆடைகளை அலங்கரித்தல் ஆகிய தொழில்களும் இதில் அடங்கும். உணவுத்துறையிலும்கூட இவர்களின் பங்கு அதிகம்.
இப்பிரிவுகள் அனைத்துக்கும் தனிப்பட்ட பிரச்னைகள் உண்டு. மேலும், 37.4 மில்லியன் தொழிலாளர்களில் பாதி பேர் பெண்களாக உள்ளனர். அவர்கள் தங்களது தொழிலுடன் குடும்பப் பொறுப்புகளையும் சேர்த்தே கவனித்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இப்பெண்களில் பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களாகவே உள்ளனர்.
அக்டோபர் 20ஆம் தேதி சர்வதேச வீட்டுத் தொழிலாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, வீட்டுத் தொழிலாளர்கள் குறித்து தேசிய அளவில் கொள்கை உருவாக்குவது பற்றி விவாதம் நடத்த இதுவே சரியான நேரமாக இருக்கும். வீட்டுத் தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களுக்கு அங்கீகாரமும், பாதுகாப்பும் வழங்கவும் ஒரு கொள்கை வகுக்கப்பட வேண்டும். கடந்த காலத்தில் இதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டன என்றாலும் கூட அவை தோல்வியடைந்துவிட்டன.
வீட்டுத் தொழில் அமைப்புகள், கல்வித்துறை, ஆராய்ச்சி அமைப்புகள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு ‘ஹோம்நெட் சவுத் ஏசியா’ புதிய கொள்கைக்கான வரைவைத் தயாரித்துள்ளது. இக்கொள்கை விரிவானதாக உள்ளது. குடும்பங்களுக்கும், சமூகத்துக்கும், பொருளாதாரத்துக்கும் பங்களிக்கும் வீட்டுத் தொழிலாளர்களை ‘தொழிலாளர்களாக’ அங்கீகரிக்க இக்கொள்கை முயல்கிறது. புதிய மாற்றத்துக்கான பொருளாதார ஏஜெண்டுகளாகவே இத்தொழிலாளர்களைப் பார்க்க வேண்டும்.
வீட்டுத் தொழில்களைச் சேர்ந்த ஒவ்வொரு பிரிவினரும் சந்திக்கும் பிரச்னைகளையும் இக்கொள்கை அணுகுகிறது. சுய தொழில் செய்யும் தொழிலாளர்களுக்குக் கடன், சந்தை, தொழில்நுட்பம் ஆகியவற்றைச் சுற்றியே உள்ளன. ஒப்பந்த ரீதியில் தொழில் செய்வோரின் பிரச்னைகள் ஊதியம், ஒப்பந்தங்களிலும் அதன் விகிதங்களிலும் உள்ள வெளிப்படைத்தன்மை, ஒப்பந்ததாரர்களின் ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சுற்றியே உள்ளன.
இத்தொழிலாளர்களின் பெரும்பகுதியானோர் பெண்களாகவே இருப்பதால், அவர்களின் பிரச்னைகளையும் புதிய கொள்கை அணுக வேண்டும். ஆயுள் காப்பீடு, உடல்நலம், ஊனமுற்றோருக்கான பலன்கள் போன்ற சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளையும், பெண்களுக்கு மகப்பேறு மற்றும் குழந்தை நலன் போன்றவற்றையும் புதிய கொள்கை வரைவு அணுகுகின்றது.
டிஜிட்டல் மற்றும் நிதி சார்ந்த கல்வியறிவு பெண்களுக்கு போதுமான அளவில் கிடைப்பதில்லை. பெண்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் விதமாக அவர்களின் வருமானம், சேமிப்பு போன்ற வாய்ப்புகளை மேம்படுத்தத் தனிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
இடைத்தரகர்களால் வன்முறையைச் சந்திக்கும் கடினமான நிலையும் பெண்களுக்கு ஏற்படுகிறது. பணி பறிபோய்விடும் என்ற பயத்தாலும், பணியிழப்பால் வருமான இழப்பு ஏற்படும் என்ற அச்சத்தாலும், இடைத்தரகர்கள் விளைவிக்கும் வன்முறைகள் குறித்து புகார்களோ, வழக்குகளோ பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை. ஆக, பெண்களின் வாழ்வாதாரத்தைக் காத்து அவர்களுக்கு போதிய பாதுகாப்பளிப்பது அரசின் பொறுப்பாகிறது.
புதிய கொள்கைகள் அலுவலகங்களிலும், நூலகங்களிலும் மட்டும் அடுக்கி வைக்கப்படாமல் செயல்படுத்தப்படுவது மிக அவசியமாகும். எந்தவொரு புதிய கொள்கையிலும் பல்வேறு அரசுத்துறைகள், அமைச்சகங்களின் பங்களிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். துறைகளுக்கு இடையேயான கமிட்டிகள் அமைக்கப்படுவது நல்ல முயற்சியாக இருக்கும்.
வீட்டுத் தொழிலாளர்கள் பயன்பெறும்விதமாக பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தற்போது மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் பிரகடனம் செய்து வருகின்றனர். மேக் இன் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் நகரங்கள், பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, ஜன் தன் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் தொழிலாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் விளம்பரம் செய்யப்படுகிறது.
இருப்பினும், அமைப்புசாரா துறையைச் சேர்ந்த வீட்டுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இத்திட்டங்கள் செயல்படுகிறதா என்பதை நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும். அவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படாமல் இருக்கிறதா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். வீட்டுத் தொழிலாளர்களுக்கென பலமான சங்கங்களோ, குழுக்களோ இல்லாத காரணத்தால், அவர்களின் தேவைகளும், பிரச்னைகளும் புறக்கணிக்கப்படுகிறது. ஆக, வீட்டுத் தொழிலாளர்களின் நலனுக்கான ஒரு விரிவான கொள்கையை உருவாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதாகத்தான் நாம் கருத வேண்டும். முக்கியமாக, புதிய கொள்கைகள் உருவாக்கப்படுவதோடு அல்லாமல், செயல்படுத்தப்படவும் வேண்டும்.
நன்றி: தி வயர்
தமிழில்: அ.விக்னேஷ்
சிறப்புக் கட்டுரை: குடிசைத் தொழிலாளர் நிலை மேம்படுமா?
Reviewed by நமதூர் செய்திகள்
on
00:39:00
Rating:
No comments: