கறுப்புப் பணம் கண்டறியப்படவில்லை: ரிசர்வ் வங்கி!
‘பணமதிப்பழிப்பு நடவடிக்கையில் எந்தவிதமான கறுப்புப் பணமும் சிக்கவில்லை’ என்று ரிசர்வ் வங்கி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் மோடி புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைத் தடை செய்து உத்தரவிட்டார். இதன்பிறகு வங்கிகள் மூலம் பழைய நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்பட்டன. கறுப்புப் பணத்தை ஒழிக்கும்விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மோடி தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவிகித நோட்டுகள் திரும்ப வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘வங்கிகளுக்குத் திரும்ப வந்த பணத்தில் கறுப்புப் பணம் எதுவும் இல்லை’ என்று ரிசர்வ் வங்கி பதிலளித்துள்ளது. அந்தப் பதிலில் ரிசர்வ் வங்கி மேலும் கூறியுள்ளதாவது: ‘தடை செய்யப்பட்டவற்றில் 9,711.62 மில்லியன் 500 ரூபாய் நோட்டுகளும், 4,709.72 மில்லியன் 1,000 ரூபாய் நோட்டுகளும் இதுவரை எண்ணப்பட்டுள்ளன. தடை செய்யப்படுவதற்கு முன்னர் 17.74 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான பணம் புழக்கத்தில் இருந்தது. இதுவரையில் எந்தவிதமான கறுப்புப் பணமும் கண்டறியப்படவில்லை’ என்றும் மேலும், ‘புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் அச்சுக் குறைபாடு உள்ளதா?’ என்ற கேள்விக்கு ஆர்.பி.ஐ பதிலளிக்கவில்லை. ‘இந்தியாவின் பொருளாதார நலன் கருதி இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க இயலாது’ என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் ஆர்.டி.ஐ சட்டம் 8 1(a)வின் கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 16ஆம் தேதி பழைய நோட்டுகளை எண்ணுவதற்கு அதிநவீன 66 இயந்திரங்களைப் பயன்படுத்துவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கறுப்புப் பணம் கண்டறியப்படவில்லை: ரிசர்வ் வங்கி!
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:31:00
Rating:
No comments: