தமிழகத்திலேயே முதன்முறையாக... ஜெ. கைரேகை வழக்கில் திருப்பம்!

தமிழகத்திலேயே முதன்முறையாக... ஜெ. கைரேகை வழக்கில் திருப்பம்!

தமிழகத் தேர்தல் வெற்றிகளை எதிர்த்து, இதுவரை நூற்றுக்கணக்கான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு தேர்தல் வழக்கிலும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அதன் முதன்மைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜரானதில்லை. அந்தச் ’சாதனையை’ நிகழ்த்த இன்று (அக்டோபர் 13) பிற்பகல், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வருகிறார் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளரான வில்ஃபிரட்.
கடந்த வருடம் திருப்பரங்குன்றத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே. போஸ் வென்று திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தோல்வி அடைந்ததாக முடிவு அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின், ’அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்பு மனுவே தகுதியற்றது, எனவே அவரது வெற்றி செல்லாது’ என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்.
அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வேட்பு மனுவில் அப்போதைய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்ததால், கையெழுத்திடுவதற்கு பதில் கை ரேகை வைத்திருந்தார்.
ஜெயலலிதாவிடம் கை ரேகை வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடுத்த வழக்கு முக்கிய கட்டத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.
இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போது, அப்போதைய திருப்பரங்குன்றம் தேர்தல் அலுவலரான ஜீவா ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் ஜெயலலிதா கை ரேகை வைத்த மனுவை ஏற்கும்படி தனக்கு அறிவுறுத்தப்பட்டதன்படி ஏற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்நிலையில்தான், அதிமுக வேட்பு மனுவில் ஜெயலலிதா கை ரேகை வைத்ததற்கு ஒப்புதல் அளித்ததாகச் சொல்லப்படும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் வில்ஃபிரட் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜர் ஆகிறார். அவரிடம் திமுக வேட்பாளரின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தவிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த தேர்தல் வழக்குகளிலேயே தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில் முதன்மை செயலாளர் ஆஜராவது இதுவே முதன்முறை என்கிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.
இது ஒருபுறம் என்றால், அப்பல்லோவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதாவை யாருமே பார்க்க இயலாதபோது, அவரைப் பார்த்து அவரிடம் கைரேகை பெற்று அதற்குச் சான்றாவணம் அளித்த டாக்டர் பாலாஜியையும் இந்த வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று திமுக வேட்பாளர் சரவணன் இன்று இன்னொரு மனுவையும் தாக்கல் செய்கிறார். இந்த மனுவும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.
இதே வழக்கில் தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

தமிழகத்திலேயே முதன்முறையாக... ஜெ. கைரேகை வழக்கில் திருப்பம்! தமிழகத்திலேயே முதன்முறையாக... ஜெ. கைரேகை வழக்கில் திருப்பம்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:54:00 Rating: 5

No comments:

Powered by Blogger.