கந்து வட்டி: முதல்வர் உத்தரவும் கள யதார்த்தமும்!

கந்து வட்டி: முதல்வர் உத்தரவும் கள யதார்த்தமும்!

திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி புகார் கொடுத்துக் கொடுத்து அலுத்துப்போன ஒரு குடும்பம் கடந்த 23ஆம் தேதி தீக்குளித்ததில் சிறு குழந்தைகள் உட்பட அந்த குடும்பமே எரிந்து போன செய்தி தமிழகத்தையே உலுக்கியது.
இந்த நிலையில் நேற்று (அக்டோபர் 25) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “அதிக வட்டி வசூலிக்கும் தனியாரிடமிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு 2003ஆம் ஆண்டே, ‘அதீத வட்டி வசூலித்தல் தடை சட்டம் 2003’ என்ற சட்டத்தை கொண்டுவந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து அதிக வட்டி வசூல் செய்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தின்படி வட்டி சம்பந்தமாக மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கையைத் துரிதமாக எடுக்கும்படி நான் மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளேன். எனவே, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எந்தவிதமாக அச்சத்துக்கும் ஆளாகாமல், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரையும், காவல்துறை அதிகாரிகளையும் அணுகி, தக்க நிவாரணம் பெறும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த அறிக்கை இந்த விவகாரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அடித்துச் சொல்கிறார்கள் நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கந்து வட்டி பற்றி கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தவர்கள்.
ஏன் என்று அவர்களிடம் காரணம் கேட்டபோது கள யதார்த்தத்தையும், அதற்குத் தீர்வையும் கூறினார்கள்.
“முதல்வர் தனிப்பிரிவு, கலெக்டரின் மனு நீதிநாள் போன்றவற்றில் கொடுக்கப்படும் புகார்கள்மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவு போட்டிருக்கிறார். ஆனால், நிலைமை என்ன தெரியுமா?
மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் கொடுக்கப்படும் புகார்கள் உடனடியாக நடவடிக்கைக்கு அனுப்பப்படுகின்றன. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புகார்களை ஃபார்வடு டு எஸ்.பி. என்று குறிப்பிட்டு எஸ்.பி. அலுவலகத்துக்கு அனுப்புகிறார்கள். எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து அந்தப் புகார்கள் தொடர்புடைய டி.எஸ்.பி. அலுவலகத்துக்கு அனுப்பப்படுகிறது. டி.எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து அந்தப் புகார் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கே அனுப்பப்படுகிறது.
ஆக, எந்த போலீஸ் ஸ்டேஷனில் தனக்கு நீதி மறுக்கப்படுகிறது என்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்கிறார்களோ, அந்த புகார் அதே போலீஸ் ஸ்டேஷனுக்கு அதே இன்ஸ்பெக்டருக்கு அனுப்பப்படுகிறது. அந்த புகார் காகிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு புகார் கொடுத்தவரை ஸ்டேஷனுக்கு அழைத்து, ‘என் மேலயே புகார் கொடுக்குறியா? பாரு, நீ கொடுத்த புகாரை’ என்று இன்ஸ்பெக்டர் மிரட்டுவது இன்னும் பரவலாக நடந்துகொண்டிருக்கிறது.
இந்த அமைப்பு முறையை மாற்றினால்தான் பொதுமக்களின் புகார்களுக்கு நீதி கிடைக்கும். கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கும் புகார்களை விசாரிக்க ஆர்.டி.ஓ. அந்தஸ்துள்ள தனி அதிகாரி ஒருவரை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நியமிக்க வேண்டும். இதுபோன்ற புகார்களை அவரே கையாண்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்குத் தொடர்புகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிட்டு அதைக் கண்காணிக்க வேண்டும்.
இந்த தனி அதிகாரியும் கலெக்டரும் இணைந்து பொதுமக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும். மாறாக வழக்கம்போல் கலெக்டர் அலுவலகம், புகார்களைச் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கும் அஞ்சல் அலுவலகமாக மட்டுமே செயல்பட்டால் இதுபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்யும்.
எனவே, முதல்வர் உடனடியாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் வரும் புகார்களை விசாரிக்க தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்” என்றார்கள்.
இந்த உண்மையை முதல்வர் உணர்ந்து நடவடிக்கை எடுப்பாரா?
- ஆரா
கந்து வட்டி: முதல்வர் உத்தரவும் கள யதார்த்தமும்! கந்து வட்டி: முதல்வர் உத்தரவும் கள யதார்த்தமும்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.