முஸஃபர் நகர்:அகதிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ தலைமையிலான பிரதிநிதிக்குழுவுடன் முலாயம் சிங் பேச்சுவார்த்தை!
முஸஃபர் நகர் : உத்தரபிரதேச மாநிலம் முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண போராட்டம் நடத்துபவர்களை ஆளும் சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் வழக்குரைஞர் ஷரஃபுத்தீன் தலைமையிலான பிரதிநிதிக்குழு இன்று முலாயம்சிங் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
முதல்வர் அகிலேஷ் யாதவும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார்.ஷாம்லி மாவட்டத்தில் முஸஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பல்வேறு முகாம்களை ஒருங்கிணைப்பதற்காக எஸ்.டி.பி.ஐ முயற்சி எடுத்து அமன் என்ற பெயரில் ஒரு கமிட்டியை உருவாக்கியது. எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில பொதுச் செயலாளர் மாஸ்டர் ஷாஹித் இக்கமிட்டியின் செயலாளர் ஆவார்.கமிட்டியின் தலைமையில் டிசம்பர் 26-ஆம் தேதி பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது.
முகாமில் தங்கியிருக்கும் மக்களுக்கு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை வழங்கவேண்டும், அனைத்து பாதிக்கப்பட்ட மக்களையும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் பட்டியலில் இடம்பெறச் செய்யவேண்டும், குற்றவாளிகளை உடனடியாக கைதுச் செய்யவேண்டும், இன்னொரு வசிப்பிடம் தயாராகும் வரை அரசு இடத்தில் மறு வாழ்விடம் அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
பிரச்சனைக்கு தீர்வு காணப்படாவிட்டால் 13-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்றும் அரசு கட்டிடங்களில் நுழைந்து பாதிக்கப்பட்டவர்கள் தங்குவார்கள் என்றும் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து சமாஜ்வாதிக் கட்சியின் மஹராஷ்ட்ரா மாநில மூத்த தலைவர் அபு அஸ்மி தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண ஏற்பாடுச் செய்தார்.மாற்று ஏற்பாடுகள் எதுவும் செய்யாமலேயே முகாமில் தங்கியிருந்தவர்களை வெளியேற்ற முன்னர் அரசு முயற்சி மேற்கொண்டது.ஆனால், அமன் கமிட்டி தலையிட்டு அரசின் முயற்சிக்கு தடை போட்டது.
முலாயம் சிங் யாதவுடன் இன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் எஸ்.டி.பி.ஐ உ.பி மாநில தலைவர் வழக்குரைஞர் ஷரபுத்தீன், மலேக்பூர் முகாமின் பொறுப்பை வகிக்கும் முஃப்தி அஸ்லம், எஸ்.டி.பி.ஐயின் உ.பி மாநில பொதுச் செயலாளர் மாஸ்டர் ஷாஹித் ஆகியோர் பங்கேற்பார்கள்.
முஸஃபர் நகர்:அகதிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக எஸ்.டி.பி.ஐ தலைமையிலான பிரதிநிதிக்குழுவுடன் முலாயம் சிங் பேச்சுவார்த்தை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:15:00
Rating:
No comments: