வெறி குறும்படம் – ஆதிக்கத்தின் திரைக்கிழிப்பு!

கடந்த 2012 நவம்பர்-7ம் தேதி, தருமபுரி மாவட்டத்தின் மூன்று கிராமங்களில் நிகழ்ந்த ஆதிக்க சாதி வெறித்தாக்குதல்களுக்கு ஆளான தலித் மக்களின் சோகக் காட்சிகள்,
புலம்பல் ஓலங்கள், மன வெதும்பல்களை ஆவணங்களாய் காட்சி படுத்தி உள்ளது, மருதம் கலைக்கூடம் சார்பாக, கு.க.பாவலன் ஆக்கத்தில் வெளிவந்திருக்கும் வெறி என்கிற ஆவணப்படம்.
தலித் சமூகத்தினைச் சார்ந்த இளவரசன் எனும் வாலிபர், திவ்யா என்கிற வன்னியர் சமூகப்பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்கிறார். இதனைத் தொடர்ந்து, திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை போன்று தோன்றத்தக்க விதத்தில் எவ்வித ஆதாரமும் இன்றி கொலை செய்யப்பட்டு விடுகிறார்.
இந்த சம்பவங்களை வைத்து வன்னியர்களை தலித் சமூகத்தின் மீது திருப்பி விடுகின்றது, பாட்டாளி மக்கள் கட்சி. இதன் விளைவு, ‘நத்தம்காலனி, கொண்டாம்பட்டி, அண்ணா நகர்’ ஆகிய மூன்று தலித் கிராமங்களில் சுமார் 400 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டும், கடப்பாரைகளால் அடித்து உடைக்கப்பட்டும், நிர்மூலமாக்கப்படுகிறது. இதன் உண்மைத் தன்மைகளை புலனாய்வு செய்து
அப்படியே காட்சியாய் அளிக்கிறது ‘வெறி’!
படத்தின் துவக்கத்தில், பாதிக்கப்பட்ட மூன்று கிராமங்களின் பெயர்களும், ஒவ்வோர் கிராமத்தில் சின்னா பின்னாமாக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கைகளையும் எழுத்துக்களால் ஓடவிடுகின்றனர். அதன்பின் பாதிப்புக்குள்ளாக்கப்பட்ட கிராமங்களில் நுழைந்து, அந்த வீடுகளையும், அங்குள்ள மக்களின் குமுறல்களையும் பதிவு செய்கின்றனர்.
அதில் ஒரு பெண் பேசுகையில்: "வந்தவர்கள் எங்களை மிகவும் கேவலமாக பேசியதுடன், எங்களின் வீடுகளை உடைத்து சேதப்படுத்தினர். ஒரு சிலர் பெட்ரோல் குண்டுகளை சுழற்றி சுழற்றி எறிந்தனர். இதற்கு முன்பாகவே அவர்கள் எங்களது வீட்டில் உள்ள பணம், நகை போன்றவைகளை கைப்பற்றிக் கொண்டனர். அதன் பின்னரே எரித்தனர்" என்கிறார்.
இன்னொரு பெண் கூறுகிறார்: "அவர்களுக்குக் குறி மனிதர்களில்லை. பணம், பொருள்கள்தான். அவைகளைத்தான் அவர்கள் சுருட்டினர். அதிலேதான் குறியாக இருந்தனர்" என்ற வண்ணம் கூறுகிறார்.
இப்படி பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ளவர்கள் பலரையும் கண்டு பேட்டி எடுத்துள்ளனர். இதுபோக அரசியல் பிரமுகர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனவும் பேட்டி கண்டு, பிரச்சனையின் ஆழத்தை எடுத்துரைக்கின்றனர்.
சம்பவம் நிகழ்ந்த பின்னர் அங்கு நேரடியாகச் சென்று தகவல்களைச் சேகரித்த எஸ்.டி.பி.ஐ- கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாகவி பேசுகையில், “கிட்டத்தட்ட 10கோடி மதிப்பிலான பொருள்கள் சூறையாடப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இவரைத்தொடர்ந்து பெரியார் திராவிடக் கழகம் கோவை.இராமகிருஷ்னண் அவர்களும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும் தங்களது கருத்துக்களை இதில் பதிவு செய்துள்ளனர். தலித் மக்களின் வீடுகள், பொருள்கள் எறிப்பு என்கிற அளவோடு
நிற்க்காமல், அவர்களின் பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் முதற்கொண்டு திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர், தொல்.திருமாவளவன் கேட்கிறார்: “நாகராஜனின் பிணம் ஊருக்குள் வைக்கப்படுகிறது. அவர் தற்கொலை செய்து இறந்தார் என்பது தனது மனைவிக்குக் கூட தெரியவில்லை; காவல்துறைக்கும் தெரியவில்லை; ஆனால் விஷமிகளுக்கு தெரிகிறது. அவர்கள்தான் அவரின் சடலத்தை ஊருக்குள் கொண்டுவந்து வைக்கின்றனர்.
அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள், ஒரு கும்பல் சாலையில் மரத்தை வெட்டிப் போடுகிறது; இன்னொரு கும்பல் வீடுகளைத் தாக்குகிறது என்றால், இது ஏதோ இரண்டு மணி நேரத்தில் நிகழ்ந்துவிட்ட யதேச்சையான சம்பவமா?” என்று கேட்டு இச்சம்பவத்தின் திட்டமிடுதலையும், நாகராஜனின் மரணத்திலுள்ள மர்மத்தினையும் கேள்விக்குள்ளாக்குகிறார்.
இதே போன்று, இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி திரு.ஜி.இராமகிருஷ்ணன், திராவிடர் விடுதலைக் கழகம் திரு.கொளத்தூர்
மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி திரு.பேரா.தீரன், சுப.வீரபாண்டியன், பத்திரிக்கையாளர் கவின் மலர், திராவிடர் கழகம் கி.வீரமணி போன்றவர்கள் இதில் தங்களது கண்டங்களையும், எதிர்ப்புகளையும், பா.ம.க மீதான, இராமதாஸ், காடுவெட்டி குரு மீதான பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன் வைத்து கருத்து கூறியுள்ளனர்.
சோகமே காட்சியாய் நகர்கின்ற படத்தில், ஆங்காங்கே பாமக நிறுவனர் இராமதாஸின் கோரப் பேச்சுக்களும் பங்கு கொண்டே நகர்கின்றது. இந்தச் சம்பவத்தின் முக்கியப் பிரச்சனையே வன்னியப் பெண்ணை, தாழ்த்தப்பட்ட ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டதுதான். ஆனால் இது ஒன்று மட்டும்தான் சாதி கலப்புப் திருமணமாக நடந்திருக்கிறதா என்றால் இல்லை. இதே படத்தில் ஒரு காட்சி:
"வன்னியர் சமூகத்தினைச் சார்ந்த சகோதரிகள் இருவர், தலித் சமூகத்தினை சார்ந்த சகோதரர்களை 22 வருடங்களுக்கு முன்பாக காதலித்து சாதி மறுப்பு திருமணம் புரிந்துள்ளனர், ஆனல் இன்றளவும் இவர்களுக்குள் எவ்வித பாகுபாடு இன்றியும் பேரன் பேத்திகளோடும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை குறித்து அவ்விரு பெண்களுமே கூறி பதுவுறுகின்றனர்”.
ஆனால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் இவர்களின் வீடும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒன்றரை வருடத்திற்கு முன்பாக வன்னியப் பெண்ணும், தலித் ஆண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களும் இந்தத் தாக்குதலில் பலி தீர்க்கப்பட்டுள்ளனர். ஆக சாதி மறுப்புத் திருமணங்கள், காதல் திருமணங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன.
ஆனால் இதுதான் முதல்முறை என்பது போல் அங்கொரு அரசியல் அரங்கேறியுள்ளது புரிய வருகின்றது. மேலும் உண்மையிலேயே வன்னியர் சமூக மக்கள்தான் இதில் நேரடியாக கொதிப்படைந்துள்ளனர் என்றால், அவர்கள் பல வருடங்களுக்கு முன்பாகவே இப்படி கொதிப்படைந்திருக்க வேண்டும். நாகராஜ் போன்ற அப்பாக்கள் தற்கொலை செய்திருக்க வேண்டும்.
ஆனால் இளவரசன் – திவ்யா விவகாரம் மட்டும் விஸ்வரூபம் எடுத்ததற்குப் பின்னால் ஒரு நுட்பமான அரசியல் உள்ளது அப்பட்டமாகின்றது. பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மட்டுமன்றி, எல்லா சமூக ஆர்வலர்களும், பொதுவுடைமைவாதிகளும் குறை சாட்டுவது பா.ம.க எனும் சாதிக் கட்சி மீதுதான்.
மருத்துவர் இராமதாஸ் ஒரு காட்சியில்: “பா.ம.க-தான் செய்ததுனு உங்களுக்கு எவன்டா சொன்னது?” என்று கேட்கிறார்.
அடுத்த காட்சியில் ஒரு பெண்: “இதற்கெல்லாம் காரணம் பா.ம.க கட்சிக்காரங்கதான்” என்பதோடு, அக்கட்சி சார்ந்த நபர்களின் பெயர்களையும் வரிசைப்படுத்திக் கூறுகிறார். அவர்கள்தான் தனது வீட்டை நாசமாக்கியது எனவும் கூறுகிறார்.
அதே சமயம், கொளத்தூர் மணி அவர்களும் இந்தப் பெண்ணின் குற்றச்சாட்டினை உண்மையாக்கும் வண்ணம், பா.ம.க மீது பகிரங்கக் குற்றம் சாட்டுகிறார்.
மேலும், இராமதாஸ், “காவல்துறையினர் யாரும் வன்னியர்களுக்கு உதவவில்லை’ என்கிறார்.
இதே கருத்தினை அந்தப் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு வந்த வெளியூர் உறவினர்கள் மறுத்து கூறுகின்றனர். காவல்துறையும், உளவுத்துறையும் வேடிக்கை பார்த்தனர் என்றும், இரண்டாயிரம் பேர் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூட்டம் போட்டு திட்டம் தீட்டியது உளவுத்துறைக்குத் தெரிந்தும் அவர்கள் ஏதும் செய்யவில்லை என்று அவ்வூரைச் சார்ந்த ஒருவரும் குற்றச்சாட்டினை முன் வைக்கின்றனர். அடுத்ததாக வன்னியர்கள் வீடுகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்டிக் காட்சி படுத்தியுள்ளனர்.
மேலும் வன்னிய சமூகத்தினரை உசுப்பேற்றியும், காதலுக்கு எதிராக இராமதாஸ் வைக்கும் சூளுரைகளையும் படம் விட்டுவைக்கவில்லை. அதேசமயம், ‘வன்னியன் கூட்டிக் கொடுப்பவன் இல்லை’ என்கிற சொல்லால் ஏனைய பிற எல்லா சமூகங்களையும் இழிவுபடுத்தும் இராமதாஸின் வக்கிரங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன.
பத்திரிக்கையாளர் கவின்மலர், இச்சம்பவம் பற்றி களத்தில் சேகரித்த குறிப்புகளோடு கூறுகிறார்: “ இது ஊடகங்களில் சரியாக பதிவிடவில்லை. அரசைப் பொறுத்தவரை ஒரு மெத்தனப் போக்குதான் நிலவுகிறது. பாதிக்கப்படவர்களின் வீடுகளைக் காணுகின்ற போது ஒன்று புரிகின்றது, தலித்துகளின் வளர்ச்சி பொறுக்காமையினால் ஆதிக்க சக்திகள் அட்டூழியம் செய்துள்ளனர்.”
தொடர்ந்து தலித் மக்களின் வீடுகள் உடைப்பு, கடைகள் உடைப்பு, அவர்களின் பொருள்கள் உடைப்பு/பறிப்பு; ஒரு அம்மா தனது மகனின் புதிய இருசக்கர வாகனம் உடைந்து கிடப்பதனை காட்டுகிறார்: "மிகவும் கடினப்பட்டு சேகரித்த பணத்தில் வாங்கியது" எனவும், தனது மகனின் மனக் கஷ்டத்தினை தானே பதிவு செய்கிறார், தலித் சமூகம் என்பதனால் ஒரு காவல்துறையினர் வீடும் தாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் புத்தகங்கள் எரிப்பு, தரையில் உள்ள பொருட்கள் அல்லாமல், மேலே உள்ள மின்விசிறியினைக் கூட முறித்து உடைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்படத்தில் இப்படி கூறப்படுகின்றது :உழைத்து களைத்துப்போன மக்கள் காற்று வாங்குவது கூட பொறுக்கவில்லையோ!”.
இப்படி நீளும் ஆதிக்கத்தின் அட்டூழியங்கள் படம் முழுக்கத் தொடராய் ஓடுகின்றது. முன்னரே திட்டமிட்டு, தலித் மக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. அதற்கு திவ்யாவினை பகடை ஆக்கியுள்ளனர்.
திருமாவளவன் இப்படி கூறுகிறார்:
“பெண்ணை வைத்து நாடகமாடப்பட்டுள்ளது. இது மிகப்பெரும் பெண்ணுரிமை மீறல்; ஆணாதிக்க வெறி” என்கிறார்.
திவ்யா இளவரசனைக் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பின்னாளில் அவர், இளவரசனை விட்டுச் செல்வதும், தனது அம்மா உடன் இணைந்து கொள்வதற்கும் உள்ளால் ஏதோ ஒன்று உள்ளதாகத்தான் தெரிகின்றது. சென்ற டிசம்பர் மாதம் சமநிலைச் சமுதாயம் இதழில், மீனா அவர்கள் எழுதிய, தருமபுரியின் தற்போதையச் சூழல் குறித்த கட்டுரையில் அவர் ஒன்றை குறிப்பிட்டுள்ளார்:
"திவ்யா இளவரசனின் வீட்டை விட்டுச் சென்றது அங்குள்ளவர்களுக்கு தெரியாது. ஏதோ போன் வர பேசியிருக்கிறார். அதன்பின்னர் வீட்டின் பின்புறம் சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் வரவே இல்லை. பின்புதான் அவர் அம்மா பின்னால் வந்து ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ள விசயம் தெரிந்துள்ளது. திவ்யாவிற்கு போன் செய்த இளவரசனிடம், அவளது அம்மா, என் மகள் சேர வேண்டிய இடத்திற்கு வந்துவிட்டாளென்று சொல்லியிருக்கிறார்.” இப்படியாக இளவரசன் வீட்டார் தெரிவித்ததாக மீனா குறிப்பிட்டுள்ளார். இது ஒன்றே தெளிவுபடுத்துகிறது, இளவரசனின் மரணத்திற்கும் வன்முறை வெறியாட்டங்களுக்கும் திவ்யா பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்பது.
இவரை ஏதோ அரசியல் தளம் இயக்கியுள்ளது. பலரின் கூற்றுப்படி குறை காணப்படும் பா.ம.க அந்த சக்தியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் இயல்பாக திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி இப்படி கூறுகிறார்:
“இது ஏதோ ஆதிக்க சக்திகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடப்பட்ட எச்சரிக்கை இல்லை. இது பெரியாரியவாதிகளுக்கும், பொதுவுடைமைவாதிகளுக்கும், மார்க்ஸியவாதிகளுக்கும், சாதியினை எதிர்ப்பவர்களுக்கும், சமத்துவத்தினை வேண்டுபவர்களுக்கும், அம்பேதகாரியவாதிகளுக்கும் விடப்பட்டுள்ள சவால்.”
கி.வீரமணி கூறியுள்ளதனை அணு அளவும் பிசகாமலும், மனிதநேயம் உள்ளவர்களிடத்தில் நியாயம் வேண்டியும், தலித்களின் மீதான தாக்குதல் மனித குலத்திற்கு எதிரான சவால் என்பதனையும் இந்த ஆவணப்படம் விவரித்து காட்சிப்படுத்தியுள்ளது.
இப்படி முழுக்க, முழுக்க தாழ்த்தப்பட இனத்தின் மீது விரிக்கப்பட்ட வன்கொடுமைகளையும், எரித்து நாசப்படுத்திவிட்டு அதனை பெருமையாகக் கூறும் சாதிய அரக்கர்களின் கர்ஜிப்புகளையும் வெளிப்படுத்தியுள்ள இந்த ஆவணப்படம், ஆதிக்க சக்திகளின் திரைக்கிழிப்பாக, முகமூடிகளை உரித்தெடுப்பதாக உள்ளது. இந்த உன்னத பணியினைச் செய்திட்ட தோழர்களுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும். மனித நேயத்தினைக் காத்திட நினைக்கும் பலரும் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டிய காட்சிப் பதிப்பு, “வெறி”!
- ஷஹான் நூர், கீரனூர்​.
வெறி குறும்படம் – ஆதிக்கத்தின் திரைக்கிழிப்பு! வெறி குறும்படம் – ஆதிக்கத்தின் திரைக்கிழிப்பு! Reviewed by நமதூர் செய்திகள் on 20:10:00 Rating: 5

No comments:

Powered by Blogger.