நீதித்துறையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை!


இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் இன்று வெளியுட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனத்தில் சமிபத்தில் தொடர்ந்து சமுக நீதி புறக்கணிக்கப்படுகிறது என்றும், நீதிபதிகள் நியமனம் முறையாக நடைபெறவில்லை என்றும் எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகள் வேதனைக்குரியது. இது சம்பந்தமாக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டு அவை நிலுவையில் உள்ளன.
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளாக தொடர்ந்து தலித் மற்றும் முஸ்லிம் சமுதாயம் நீதித்துறையில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்தது 3 முஸ்லிம் நீதிபதிகள். ஒருவர் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று விட்டார். மற்றொருவர் ஒய்வு பெற்றுவிட்டார். மீதமுள்ள ஒருவர் இன்னும் ஒருசில மாதங்களில் ஒய்வு பெறவுள்ளார். இன்னும் காலியான இரண்டு இடங்களுக்கு முஸ்லிம் நீதிபதிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நீதிபதிகள் நியமனத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் வழக்கறிஞர்கள் அனைவரும் அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் அடிப்படைவாதிகள் முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளனர். இப்போது அனுப்பிய நீதிபதி நியமன பட்டியலிலும் வழக்கறிஞர் மத்தியில் இருந்து ஒரே ஒரு முஸ்லிம் மட்டும் கண் துடைப்புக்காக பரிந்துரைக்கப்பட்டு, அவரையும் நிராகரிக்க உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தீர்மானித்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக முஸ்லிம் சமுதாயத்திற்கு நீதித்துறையால் அநீதி இழைக்கப்படுகிறது. இந்நிலை மாற்றப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு முஸ்லிம் வழக்கறிஞர்களுடன், மேலும் தகுதியான வழக்கறிஞர்கள் பெயர் இணைக்கப்பட்டு அவர்களிலிருந்து நியமனம் செய்து சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். இது சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கையாகும். இப்போது பரிந்துரைக்கப்பட்டுள்ள இரண்டு பேர்களும் நீக்கப்பட கூடாது. அப்படி நீக்கப்பட்டால் நீதித்துறையின் சிறுபான்மை இனத்துக்கு எதிரான பாரபட்சமான போக்கை கண்டித்தும், அனைத்து சமுதாயம் மற்றும் அணைத்து வகுப்பினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்ககோரியும் வலுவான போராட்டங்களை முன்னெடுக்கும் சூழலை அது ஏற்படுத்தும். சமூக நீதியை நிலை நாட்ட மற்றும் அனைத்து சமுதாயத்திற்கும் உரிய பிரதிநிதித்துவம் மற்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான முடிவு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராடும் வழக்கறிஞர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயக நாட்டில் நீதித்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நாட்டு மக்களின் நம்பிக்கையாக நீதித்துறை விளங்குகிறது. அதில் நியமிக்கப்படும் நீதிபதிகள் தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதே சமயம் சமூக நீதி அடிப்படையில், சிறுபான்மை மற்றும் தலித் வகுப்பினர் மற்றும் இதுவரை பிரதிநிதித்துவம் அளிக்கப்படாத மக்களுக்கும் உரிய வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படை தன்மை வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மத்திய அரசும், நீதித்துறையும் இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோருகிறேன். இது சம்பந்தமாக பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய சட்ட அமைச்சர் ஆகியோர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நீதித்துறையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை! நீதித்துறையில் சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எஸ்.டி.பி.ஐ கட்சி கோரிக்கை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:39:00 Rating: 5

No comments:

Powered by Blogger.