பொதுமக்கள் பிடித்த டவுசர் கொள்ளையனை காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்?

அரியலூர்: பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த டவுசர் கொள்ளையன், மனநிலை பாதித்தவர் என போலீசார் சொல்லுவது அவரை காப்பாற்றும் முயற்சியா என்ற சந்தேகம் எழுந்தள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்தது. ஆனால் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி இரவு அரியலூரை அடுத்த  கீழப்பழுவூரில் இரும்பு கடை வைத்திருக்கும் நடராஜன் என்பவரின் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற  திருடர்கள், லாக்கரில் பணம் ஏதுமில்லை என்றதும்,  கடுப்பில் கடையிலிருந்த  பொருட்களை கண்டபடி வீசிவிட்டு, அடுத்தடுத்து இருந்த ராஜேந்திரன், பிரசன்னா ஆகியோரது வீடுகளில் கைவரிசை காட்ட துவங்கினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் என்பவரது மனைவி ஜோதி, திருடர்களை பார்த்துவிட, டவுசர் கொள்ளையர்கள், கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் ஜோதி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையையும் டவுசர் கொள்ளையர்கள் பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிவிட்டனர். படுகாயமடைந்த ஜோதி தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதே நாளில் அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி  கிராமத்திலும் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திருடர்கள் பீதியில் செய்வதறியாது தவித்த அந்த பகுதி மக்கள், போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் பலனில்லை. இந்நிலையில் பொதுமக்கள் தங்களை தாங்களே காத்துக்கொள்ள முடிவெடுத்ததோடு, இரவு நேரங்களில் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு, விளாங்குடியை அடுத்துள்ள காவானூர் எனும் கிராமத்தில் டவுசர் கொள்ளையர்கள் 4 பேர் ஒரு வீட்டில் நுழைந்தபோது அதை கண்ட சிலர் மற்றவர்களுக்கு தகவல் தர நிலைமையை புரிந்துகொண்ட கொள்ளையர்கள் தலைதெறிக்க ஓட்டம்  பிடித்தனர்.
கொள்ளையர்களில் ஒருவன் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கினான். அவனை கட்டி வைத்த பொதுமக்கள் உடனடியாக  கயர்லாபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். டி.எஸ்.பி. தொல்காப்பியன் தலைமையிலான போலீசார் காவனூர் சென்று கொள்ளையனை மீட்டு அவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவன் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த ராஜா என்று தெரியவந்தது. அவனுடன் வந்த கூட்டாளிகள் தொடர்பாகவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்களே கொள்ளையர்களை விரட்டி பிடித்த சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதைவிட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளனர் போலீசார். பிடிபட்ட கொள்ளையன் ராஜா, மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று போலீசார் சொல்வதாக காவனூர் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கயர்லாபாத் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, பிடிப்பட்டவன், பைத்தியம்னு தெரியவந்திருக்கு. அதற்கான சான்றிதழ்கூட இருக்கு என்றவர்களிடம், எதற்காக அவன் அந்த ஊருக்கு வந்தான் என்று கேள்வி எழுப்பினோம். வழிதவறி வந்துட்டதாக சொன்னார்கள்.

இந்த கொள்ளையர்களுக்கு பலமான பிண்ணனி உள்ளதாகவும், அதனால் காவல்துறையினர் திருடர்களை தப்ப வைக்க  நாடகமாடுவதாக குற்றஞ்சாட்டுகிற பொதுமக்கள், "திருடர்களை பிடிக்கவும் மாட்டாங்களாம், பிடிச்சிக்கொடுத்தால் ஏதாவது காரணம் சொல்லி வெளியே விட்டுடுவாங்களாம். அப்புறம் எப்படி நாங்க நிம்மதியா தூங்க முடியும்...?" என புலம்புகிறார்கள்.

சி.ஆனந்தகுமார்
பொதுமக்கள் பிடித்த டவுசர் கொள்ளையனை காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? பொதுமக்கள் பிடித்த டவுசர் கொள்ளையனை காப்பாற்ற நினைக்கிறதா போலீஸ்? Reviewed by நமதூர் செய்திகள் on 06:47:00 Rating: 5

No comments:

Powered by Blogger.