கரும்புக்கு கூடுதல் விலை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


கரும்புக்கு கூடுதல் விலை கோரி ஆர்ப்பாட்டம் 
கரும்பு டன்னுக்கு ரூ. 3,500 விலை அறிவிக்கக் கோரி ஜன. 29-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென, விவசாயிகள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில் தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர், அரியலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாநிலச் செயலர் ஆர். ராஜாசிதம்பரம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவர்கள் பி. மாணிக்கம் (பெரம்பலூர்), என்.பி. அன்பழகன் (அரியலூர்), மாவட்டச் செயலர் வி. நீலகண்டன், வி. விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பெரம்பலூர் சர்க்கரை ஆலை எதிரே கரும்பு டன்னுக்கு ரூ. 3,500 அறிவிக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் நிதி ஒதுக்கீடு இன்றி கிடப்பில் போடப்பட்ட இணை மின் உற்பத்தி மற்றும் ஆலை நவீனப்படுத்தும் திட்டம் செயல்படுத்தாததைக் கண்டித்தும், நெல், மக்காசோளம், பருத்தி, வெங்காயம், முந்திரி, கடலை, எள் ஆகியவற்றிற்கு நியாயமான கட்டுப்படியான விலை அறிவிக்கக் கோரியும் மார்க்சீய பெரியாரிய பொதுவுடைமை கட்சி அமைப்புச் செயலர் தலைமையில், ஜன. 29-ம் தேதி நூதன போராட்டத்தில் ஈடுபடுவது.
பெரம்பலூரில் உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 91-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிப். 6-ம் தேதி கோரிக்கை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவது. வானிலை பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தனிநபர் விவசாயம் பாதிக்கப்பட்டாலும் காப்பீட்டுத் தொகை வழங்க வழி செய்ய சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும். மருதையாறு நீர்த்தேக்க திட்டத்திற்கு கையக்கப்படுத்தப்படும் நிலங்களுக்கு, சந்தை மதிப்பைவிட 4 மடங்கு இழப்பீடாக வழங்க வேண்டும். விருத்தாசலம், அரியலூர், பெரம்பலூர், ஆத்தூர் வழியாக சேலம் வரை புதிய ரயில் தடம் அமைத்து, ரயில் விட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோமாரியால் பாதிக்கப்பட்டு இறந்த கால்நடைகளுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியுள்ள நிலையில், பால் விற்பனை விலையை உயர்த்தி விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கரும்புக்கு கூடுதல் விலை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு கரும்புக்கு கூடுதல் விலை கோரி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு Reviewed by நமதூர் செய்திகள் on 19:54:00 Rating: 5

No comments:

Powered by Blogger.