கோயிலுக்கு வந்த வாலிபர் மீது ஊர்காவல் படையினர் கொடூர தாக்குதல்


கோயிலுக்கு வந்த வாலிபர் மீது ஊர்காவல் படையினர் கொடூர தாக்குதல்.

சென்னை : போலீசாருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஊர்காவல் படை வீரர்கள்,  வடபழனியில் வாலிபர் ஒருவரை தாக்கிய சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும், விடுமுறை காலங்களிலும் போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படைவீரர்கள், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவது மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையிலும் ஊர்காவல் படையில் படித்த இளைஞர்கள், சமூக ஆர்வம் உள்ளவர்கள் உள்ளனர்.அதேபோல, ‘போலீஸ் நண்பர்கள் குழு’வை (பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்) சேர்ந்தவர்களும் இரவு நேர பாதுகாப்பில் உள்ளூர் போலீசாருக்கு உதவியாக இருந்து வருகின்றனர். இவர்கள் ரோந்து பணி மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும்போது ‘போலீஸ் நண்பர்கள் குழு’வைச் சேர்ந்த இளைஞர்களை அழைத்துச் செல்கின்றனர்.

இதற்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் உட்பட்ட பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள், சமூக அக்கறை கொண்டவர்கள் என நன்னடத்தை கொண்ட இளைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இப்படி தேர்வு செய்யப்படும் இளைஞர்களில் சிலர் சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவதுதான் வேதனையாக உள்ளது. குறிப்பாக ஊர்க்காவல் படையைச் சேர்ந்த வீரர்கள், தங்களை போலீஸ் பணியில் உள்ள அதிகாரிபோல நினைத்து, சாதாரண மக்களை வசைபா டுவதும், அடித்து உதைப்பதுமாக இருந்து வருகின்றனர். இது குறித்து பல முறை போலீஸ் உயரதிகாரிகளுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டும், எந்த பலனும் ஏற்படவில்லை. 

அதே சமயம், போலீசார் வைத்திருக்கும் லத்தியை போன்ற பெரிய கம்புகளை கையில் வைத்து கொண்டு வாகன ஓட்டிகளை மிரட்டுவதும், தேவையில்லாமல் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் குடும்பத்தினருடன் வரும் பைக் ஓட்டிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.குறிப்பாக, வடபழனி, விருகம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்காவல் படையினர் தொடர்ந்து அத்து மீறி செயல்பட்டு வருவதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது.இதை நிரூபிக்கும் வகையில் வடபழனி அம்மன்கோயில் தெருவில் (கிழக்கு) நேற்று தைப்பூச பால்காவடி விழா நடைபெற்றது.அதில், கலந்து கொண்ட வாலிபர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அவரை அழைத்து போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். அதற்கு அந்த வாலிபர்,கோயிலுக்குதான் வந்தேன். நீங்க நினைக்கிற மாதிரி எந்த தப்பும் செய்யவில்லை  என்று போலீசாரிடம் பதில் அளித்து கொண்டிருந்தார். ஆனால், போலீசாரின் கிடுக்கிபிடி விசாரணையில் டென்ஷனான அந்த வாலிபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது, போலீசார் அருகில் நின்றிருந்த ஊர் காவல் படையினர், எங்கள் அதிகாரிகளை எதிர்த்து பேசுகிறாயா என்று ஆவேசத்துடன் கூறி, அந்த வாலிபரை சூழ்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். ஊர்காவல் படையினரை போலீசார் சமாதானம் செய்ய முயன்றும் அது பலனளிக்கவில்லை. அந்த வாலிபரை பொதுமக்கள் முன்னிலையில் ஒரு குற்றவாளியைப்போல அடித்து உதைத்து அருகில் இருந்த வேனில் ஏற்றினர். பின்னர், அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்தக் காட்சியை பார்த்த பக்தர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இது குறித்து பக்தர் ஒருவர் கூறியதாவது:நாங்கள் பால்காவடி எடுத்து வருகிறோம். எங்கள் கூட்டத்தில் வந்த நபரிடம் அவர் யார் என்னவென்று விசாரித்து கொண்டிருக்கும்போதே, ஊர்காவல் படையினர் அடித்து உதைத்தனர். அந்த வாலிபர் தன்னைப் பற்றி முழுமையாக சொல்வதற்கு கூட ஊர்காவல் படையினர் அனுமதிக்கவில்லை. அவர்களுக்கு போலீஸ் அளவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று தெரியவில்லை என்றார்.
கோயிலுக்கு வந்த வாலிபர் மீது ஊர்காவல் படையினர் கொடூர தாக்குதல் கோயிலுக்கு வந்த வாலிபர் மீது ஊர்காவல் படையினர் கொடூர தாக்குதல் Reviewed by நமதூர் செய்திகள் on 00:59:00 Rating: 5

No comments:

Powered by Blogger.