முஸ்லிம்களும் இடஒதுக்கீடும்!

சுதந்திரதின போராட்டத்திற்காக தங்களுடைய சொத்துக்களை இழந்தவர்கள், சுதந்திரப்போராட்டத்தில் இறந்தவர்கள், தொலைந்தவர்கள்,
தொலைக்கப்பட்டவர்கள், சகோதர்களைத் தொலைத்த சகோதரிகள், பிரிந்த ரத்த சொந்தங்கள், துயர்தாங்காமல் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டவர்கள், சொந்த நாட்டில் அனாதைகளாக்கப்பட்டவர்கள்.. இவர்கள் தான் முஸ்லிம்கள். ஆங்கிலேயனை எதிர்த்த ஒரே காரணத்திற்காக 1871 ஆம் ஆண்டு முதல் அரசுப்பணிகளில் வேலை வாய்ப்பு மறுப்பு, பியூன், வேலை ஆள், செக்யூரிட்டி இதுதான் முஸ்லிம்களுக்கு அதிக பட்ச பதவி உயர்வு என்று வில்லியம் ஹன்டர் என்ற கவர்னர் ஜெனரல் "தி இந்தியன் முஸல்மான்" என்ற புத்தகத்தில் எழுதினார்.
1860 ஆம் ஆண்டு பள்ளிக்கூடத்தில் ஒரு வகுப்பில் 1 முஸ்லிம் மாணவன் கூட இல்லாத நிலை இருந்தது. இதற்கு காரணம் ஆங்கிலேயனை எதிர்த்த ஒரே காரணம் தான். "இங்கிலிஸ் மொழி இப்லிஸ் மொழி" என்று பள்ளிவாசல் மேடை தோறும் முழங்கப்பட்டது. ஆங்கிலம் படிப்பது ஹராம் அதாவது தவிர்க்கப்பட்டது என பத்வாக்கள் என்ற மார்க்க தீர்ப்புகளும் வழங்கப்பட்டன. விளைவு இன்று வடஇந்தியாவில் மிகவும் கேவலமான வேலைகளை செய்யும் நிலைக்கு முஸ்லிம்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
தள்ளுவண்டி இழுத்தல், சாக்கடை அள்ளுதல், இறந்த மாடுகளை இழுத்து செல்லுதல்... வானமே கூரையாக அமைத்து சாலையோர பிளாட்பாரங்களே இவர்களின் குடில்கள்.
முஸ்லிம்கள் வழக்கறிஞர்களாகவும், நீதிபதியாகவும் இருந்த காலம் மாறி தற்பொழுது நீதிமன்ற வளாகங்களில் தீவிரவாதி என்ற முத்திரையோடு அலைக்கழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் கடத்தல்காரர்கள் என்ற முத்திரையும், தற்பொழுது தீவிரவாதி என்ற முத்திரையும் பரிசாக அளிக்கப்பட்டு அந்த கேடயத்தை இன்றளவும் சுமந்து வருகிறார்கள்.
முகலாயர் ஆட்சிக்காலத்தில் காவல்துறை, இராணுவம், வருவாய்த்துறை, நீதித்துறை, கல்வி, மருத்துவம் என்ற அனைத்து பணிகளிலும் முஸ்லிம்கள் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தார்கள். இந்து-முஸ்லிம்களின் மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்ட பேரரசர் அக்பர் படைபிரிவில் 252 அதிகாரிகளில் 31 நபர்கள் தவிர அனைவரும் முஸ்லிம்களாக இருந்தனர்.
16 ஆம் நூற்றாண்டு இறுதியில் கூட ஹிந்துக்களும் பாரசீக மொழியினை பயின்று கவிஞர்களாக திகழ்ந்தனர். இவ்வளவு பெருமை வாய்ந்த முஸ்லிம்கள், மலைவாழ் மக்களை விட மோசமாக உள்ளார்கள் என்பதை கண்டுபிடிக்க அரசு எடுத்துக்கொண்ட கால அவசாகம் 60 ஆண்டுகள்.
பீகார், உத்திரப்பிரதேசம் மற்றும் வங்காளத்தின் சில பகுதிகளில் தலித்கள் என்ன வேலை செய்கிறார்களோ அதே வேலையை முஸ்லிம்களும் செய்து கொண்டிருக்கின்றனர். மதத்தின் அடிப்படையில் ஒரு ஹிந்து தலித், அரசின் பல சலுகைகளைப் பெறுகிறார். ஆனால் ஒரு முஸ்லிமுக்கு எந்த சலுகையும் இல்லை. 1950 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணை ஒன்று இயற்றப்பட்டது. 1956 ல் சீக்கியர்களுக்கும், 1990 ஆம் ஆண்டு புத்தர்களுக்கும் சலுகைகளை வழங்கியது. இவர்கள் அனைவரையும் தலித் என்ற வட்டத்திற்குள் சேர்த்தது. ஆனால் இந்த வேலைகளை செய்து வரும் முஸ்லிம்களுக்கு சலுகைகளை மறுத்தது அரசு.
முஸ்லிம்கள் என்றால் வெளிநாட்டில் கொட்டிக்கிடக்கும் பணத்தை அள்ளி வருபவர்கள் என்ற மாயத்தை உருவாக்கி உயர்தர எண்ணத்தை இன்றளவும் முஸ்லிம் தலைவர்களும் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து தங்களது சுயலாபங்களை அடைகின்றனர்.
ஏ.டி.எம். மிசினும்-முஸ்லிம் ஆடவனும்
பத்தாம் வகுப்பு படித்தவுடன் வளைகுடா நாட்டிற்கு பாஸ்போர்ட் எடுத்து சென்று அங்கு ஒட்டகம் மேய்ப்பது முதல் கக்கூஸ் கழுவுவது வரை அனைத்து கீழ்மட்ட வேலைகளையும் செய்து தன்னுடைய இளமையை தியாகம் செய்து ஊருக்கு திரும்பும்போது அவன் அனைத்து நோய்களுக்கும் அதிபதியாக வருகிறான். வந்தவனை இல்லத்தாரும் மதிப்பதில்லை. பிறரைப்பொறுத்தவரை அவன் ஒரு ஏ.டி.எம்.மிசின்தான். பணம் இருந்தால் மட்டுமே அவனுக்கு மரியாதை என்ற நிலை. வெளிநாட்டில் இருந்ததால் அவனால் அரசியல், சமூகம், கல்வி என எதிலும் பங்களிக்க இயலாத பரிதாப நிலை!
கோமா நிலையில் கமிசன்கள்
1951 செப்டம்பர் 27ல் அரசு ஆணை எண் 2452 மூலம் தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர்களுக்கு 16 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவீதம் என மொத்தம் 41 சதவீதம் இடஒதுக்கீடு அமுலுக்கு வந்தது. ஆனால் முஸ்லிம்களுக்கு வகுப்புரிமை ஆணை மூலம் வழங்கப்பட்டிருந்த 7 சதவீத தனி இடஒதுக்கீட்டை மறந்து விட்டார்கள். கமிசன்களும் அவ்வப்போது அறிக்கைகளை காகித்தில் விட்டு அதன்படி கோப்புகளும் உறங்கி கிடக்கின்றன.
தீர்வு
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் கல்வி கற்கவேண்டும். கல்வி கற்று இங்கேயே பணிபுரிய வேண்டும். வெளிநாடு செல்வதை தவிர்த்து கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தொடங்கவேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்டெடுத்து கல்விக்கு பயன்படுத்தினால் ஒழிய வெறும் இட ஒதுக்கீடு வாங்கிவிடுதனால் மட்டுமேயும் இதற்கு தீர்வு கிடைக்காது.
-வைகை அனிஷ்
முஸ்லிம்களும் இடஒதுக்கீடும்! முஸ்லிம்களும் இடஒதுக்கீடும்! Reviewed by நமதூர் செய்திகள் on 20:06:00 Rating: 5

No comments:

Powered by Blogger.