பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டால் ஜெயிக்கலாம்!

காலை முதல் மாலை வரையிலான ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள்.
எத்தனை விவாதங்கள், எத்தனை பேரங்கள், எத்தனை கருத்து மோதல்கள்!
காலையில் காய்கறி வாங்குவதில் துவங்கி, அலுவலகத்தில் சம்பள உயர்வுக்கு வாதிடுவது வரையில் எத்தனை விதமான உரையாடல்கள்?
இதில் எத்தனை சதவீதம் பேச்சுகளில் வெற்றி நமக்குக் கிடைத்திருக்கும்?
நமது வாழ்க்கையின் ஒவ்வோர் படியிலும் ஏதோ ஒரு பேரமும், விவாதமும் காத்திருக்கிறது.
அப்பாவிடம் அடம்பிடிக்கும் குழந்தையும், கணவனிடம் விண்ணப்பிக்கும் மனைவியும், மனைவியிடம் சமாதானம் பேசும் கணவனும் எல்லோருமே எதோ ஒரு விதத்தில் இந்த பேரத்தில் ஈடுபடுகிறார்கள்.
சிலர் இந்த விஷயங்களில் கில்லாடிகள். எந்த விதமான பேச்சிலும் தனது தரப்பு நாசூக்காய் வெற்றி பெறும்படி செய்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்களுக்கு ‘பேசியே ஆளை மயக்கிடுவான்’ எனும் பட்டம் கிடைத்து விடும்.
இன்னும் சிலருக்கு இதெல்லாம் சுட்டுப் போட்டாலும் வராது. ‘இவனெல்லாம் பேரம் பேசினா தலையில மொளகா அரைச்சுடுவாங்க’ எனும் பட்டம்தான் மிஞ்சும்.
இது காய்கறிக் கடையிலோ, சந்தை வீதியிலோ மட்டும் நடக்கும் சங்கதியல்ல. இன்றைக்குக் கொடிகட்டிப் பறக்கும் எல்லா பெரிய பெரிய நிறுவனங்களும் இந்த ‘பேச்சுவார்த்தை’ நபர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதிலும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். வாடிக்கையாளர்களை கவர ‘வடம் இழுக்கும் போட்டி’யை இவர்கள் வசீகர வார்த்தைகளால் நடத்துவார்கள்.
‘பேரம் பேசுதல்’ என நாம் சொல்லும் இந்தத் திறமையை ஆங்கிலத்தில் ‘நெகோஸியேஷன் ஸ்கில்ஸ்’ என்கிறார்கள்.
இதைச் சின்ன விஷயமாக நினைத்து விடாதீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் எந்த இடத்தை அடையப் போகிறீர்கள் என்பதை இந்தத் திறமைதான் நிர்ணயிக்கப் போகிறது!
ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் ‘உலகிலேயே சிறந்த நெகோஷியேட்டர் விருது’ ஒன்றை வழங்கி வருகிறது. பின்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்டி அதிஷாரிக்கு கடந்த ஆண்டின் விருது வழங்கப்பட்டது.
இந்தத் திறமை ஏதோ வானத்திலிருந்து விழுகின்ற சமாச்சாரமல்ல, இதை நாமே வளர்த்தெடுக்க முடியும். அதற்கு ஏகப்பட்ட பயிற்சி நிலையங்கள் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கின்றன. உலகெங்கும் கிளை பரப்பியிருக்கும் இத்தகைய பயிற்சி நிலையங்களுக்கு ஏகக் கிராக்கி. செலவும் எக்கச்சக்கம். அவை ஏதும் இல்லாமலேயே சில அடிப்படை விஷயங்கள் தெரிந்திருந்தால் யார் வேண்டுமானாலும் பேரம் பேசுவதில் சாதிக்கலாம் என சத்தியம் செய்கின்றனர் வல்லுனர்கள்.
எல்லா பேரங்களுமே நான்கு நிலைகள் கொண்டவை.
தயாரிப்பு, தகவல் பரிமாற்றம், விவாதம், ஒப்பந்தம்… இவையே அந்த நான்கு நிலைகள்.
எதைக் குறித்து பேசுகிறோம், ஏன் பேசுகிறோம், நமது தேவை என்ன? எனும் மும் மூர்த்திகளைப் பற்றி ரொம்பத் தெளிவான புரிதல் இருக்க வேண்டியது முதல் தேவை.
குறிப்பாக நீங்கள் பேசப் போகும் விஷயத்தின் ‘மதிப்பு’ எவ்வளவு என்பதைப் பற்றி சரியான தகவல் கையில் இருக்கட்டும்.
பேரம் என்பது மாறி மாறி தங்கள் தரப்பை நியாயப்படுத்திக் கொண்டிருப்பதல்ல. தனது கருத்தை அடுத்தவர் ஏற்கச் செய்வது. அதுவும் அடுத்தவர் மனமுவந்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
சிறப்பாகத் தயாராகாமல் எந்த ஒரு பேரத்தையும் வெற்றிகரமாக முடிக்க முடியாது. உங்கள் தேவை என்ன என்பதை மட்டும் பார்க்காமல், எதிர் நபருடைய தேவை என்ன என்பதையும் கவனமாய்ப் பார்க்க வேண்டும். அவருடைய தேவைகள் சந்திக்கப்படுவதன் மூலமாக உங்கள் தேவைகள் சந்திக்கப்பட வேண்டும். அதுதான் சிறந்த பேச்சு வார்த்தை!
‘நேர்மை’ இங்கும் பிரதானமாகிறது!
நிறுவன பேச்சுவார்த்தைகளைப் பொறுத்தவரை `எது சாத்தியம்’ என்று சொல்வதைப் போலவே முக்கியமானது `எது தன்னால் இயலாது’ என்பதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்வது.
நீங்கள் நேர்மையாய் உண்மையாய் இருக்கிறீர்கள் என்பது தெரிந்த பிறகே எதிர் தரப்பும் உண்மையாய் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருமுறை நீங்கள் சொல்லும் கருத்தில் நிலைத்திருங்கள். உங்கள் கருத்தை நீங்களே மறுத்துப் பேசினால் எல்லாம் போச்சு. உங்கள் மீதான நம்பகத்தன்மை அதல பாதாளத்தில் விழுந்து விடும்.
ஒருவேளை மறுத்தே ஆகவேண்டிய சூழல் நேர்ந்தால் கூட ‘நாளை தொடர்வோம்’ என ஒரு இடைவெளி விடுதல் நலம்.
உங்களுடைய எல்லையை மிகத் தெளிவாக தெரிந்து வைத்திருங்கள். குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் எனும் எல்லைகள் தெளிவாய் இருந்தால் உங்களுடைய விவாதம் வலிமையாய் இருக்கும்.
யார் பெரியவன் என்பதைப் பறைசாற்றும் இடமல்ல இத்தகைய விவாத அறைகள். கொடுக்கப்பட்டிருக்கும் மையப் பிரச்சினையை எப்படி இரு தரப்பும் சுமூகமாக, மனநிறைவுடன் முடித்துக் கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.
பேசுவதை விட முக்கியம் கவனிப்பது. வார்த்தைகளைக் கவனிப்பதை விடக் கவனமாக, பேசுபவரின் உடல் மொழியைக் கவனிப்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.
7 சதவீதம் வார்த்தைகளும், 93 சதவீதம் வார்த்தைகளற்ற அசைவுகளுமே பேசுகின்றன என்கின்றனர் வல்லுனர்கள்.
எனவே மிக நுணுக்கமாய்க் கவனிப்பவர்களே இந்த ஏரியாவில் ஜாம்பவான்கள்!
ஒரு முக்கியமான விஷயம்! புள்ளி விவரங்கள், விலைப்பட்டியல்களை அவிழ்த்து விடும்போது எக்காரணம் கொண்டும் பொய் சொல்லாதீர்கள். உங்கள் குட்டு மிக விரைவிலேயே வெளிப்பட்டு விடும். அதற்குப் பிறகு நீங்கள் எப்போதுமே சந்தேகக் கண்ணோடுதான் கவனிக்கப்படுவீர்கள்.
இலவச இணைப்புக்கு இருக்கும் மரியாதையே தனிதான். ஒரு சேலை வாங்கினால் ஒரு தோசைக்கல் இலவசம் என்பார்கள். சேலை தேவையில்லாவிட்டால் கூட அங்கே கூட்டம் அலை மோதும். நிறுவனங்களும் கிட்டத்தட்ட அப்படியே.
உங்கள் பேரத்தில் சில கூடுதல் பயன்களை இலவசமாகக் கொடுத்தால் உங்கள் `டீல்’ நல்லபடியாய் முடிய வாய்ப்பு அதிகம்.
பேரத்தில் உங்களுக்கு மட்டுமே வெற்றி கிடைக்க வேண்டும் என நினைக்கவே கூடாது. அப்படி ஒரு பேரம் முடிவதும் இல்லை. இரு தரப்புக்குமே வெற்றி என்பதே அடிப்படை நியதி. அதில் யார் அதிக பயன் பெறுகிறார்கள் என்பதே விஷயம்.
தெருவோர பொம்மைக்காரர் ஐநூறு ரூபாய் என ஒரு பொம்மையைக் காட்டுவார். அதன் விலை 100 ரூபாயாக இருக்கும். அதை அவர் 100 ரூபாய்க்குக் கீழே விற்கப் போவதில்லை. நீங்கள் அந்த பொம்மையை நானூறு ரூபாய் என பேரம் பேசுகிறீர்களா? இல்லை நூற்றைம்பது என வாங்கிப் போகிறீர்களா என்பதே கவனிக்க வேண்டிய விஷயம்.
பேரம் பேசுகையில் மிக வலுவான சில பாயிண்ட்கள் உங்களிடம் இருக்க வேண்டியது ரொம்பவே அவசியம். அத்தகைய வலுவான விஷயங்களைச் சுற்றியே உங்கள் பேரத்தை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தரப்பு விவாதக் கருத்துகளுக்கான தெளிவான காரண காரியங்களையும் கையோடே வைத்திருங்கள். அதே போல ஒரே ஒரு முடிவை நோக்கியே விவாதங்களை அமைக்காமல் இருப்பது நல்லது. அதற்கு உங்களிடம் இரண்டு மூன்று மாறுபட்ட அணுகுமுறைகள் இருப்பதே புத்திசாலித்தனம்.
‘நாட்டாமைக்கு ஒரே நாக்கு, ஒரே வாக்கு’ என்பதெல்லாம் சினிமாவுக்குத்தான் பொருந்தும். நிறுவனங்களைப் பொறுத்தவரை எழுதிக் கையெழுத்திட்டுத் தராதவரை எதுவும் உத்தரவாதமில்லை. எனவே எந்த ஒரு விவாதத்தின் முடிவிலும் ஒரு ஆதாரம், சாட்சி, எழுத்து வடிவம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பாடு.
எப்பாடுபட்டாவது இந்த பேரத்தை முடிக்க வேண்டும் எனும் உங்கள் மனநிலையைக் வெளிக் காட்டாதீர்கள். ஒருவேளை பேரம் உங்களுக்குச் சாதகமாக இல்லாமல் போனால் கூட நட்புடன் விடைபெறுங்கள்.
பேரத்தில் உணர்ச்சி வசப்படுவது ரொம்பவே தவறு. அது நமது திறமையின்மையை பளிச் என பறை சாற்றி விடும். வெகு இயல்பாய் இருங்கள். எப்போதும் புன்முறுவலையும், நட்பையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக சம்பள உயர்வுக்காக உங்கள் மேலதிகாரியுடன் பேசுகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள், அவரிடம் உங்கள் நிலையை மிகத் தெளிவாக விளக்குங்கள். உங்கள் தேவைகள், எதிர்பார்ப்புகள், மனக்கசப்பு எல்லாவற்றையும் சொல்லுங்கள். ஆனால் அந்த விவாதம் முடிந்ததும் மீண்டும் நட்புடன் நடமாடுங்கள்.
பேரத்தை முடிப்பது ஒரு கலை. சரியான நேரத்தில் முடிக்காமல் வளவளவென இழுத்துக் கொண்டிருந்தால் முடிய வேண்டிய டீல்கள் கூட முடியாமல் போய்விடும் என்பதே உண்மை.
இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்திலோ, சமூகத்திலோ நடக்கும் பேச்சு வார்த்தைகளில் வெற்றியுடன் திரும்பி வாருங்கள்.
பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டால் ஜெயிக்கலாம்! பேச்சாற்றலை வளர்த்துக்கொண்டால் ஜெயிக்கலாம்! Reviewed by நமதூர் செய்திகள் on 02:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.